பணமோசடி வழக்கு – ஆம் ஆத்மி கட்சி எம்பி வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை..!

இந்தியா

பணமோசடி வழக்கு – ஆம் ஆத்மி கட்சி எம்பி வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை..!

பணமோசடி வழக்கு – ஆம் ஆத்மி கட்சி எம்பி வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை..!

பணமோசடி வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆதாரங்களின் படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ நிலமோசடி தொடர்புடைய வழக்கில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அரோராவுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அரோரா மீது வஞ்சகமாக நிலங்களை தனது நிறுவனத்துக்கு மாற்றிய குற்றச்சாட்டுகளும் அடங்கும்.

இதுகுறித்து ஆம் ஆத்மி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். இந்த சோதனைகள் என்ன காரணத்தினால் நடத்தப்படுகின்றன என்று உறுதியாக தெரியவில்லை. அமலாக்கத் துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, தங்கள் கட்சியின் எம்.பி. மீதான இந்தச் சோதனை தங்களின் கட்சியை உடைக்கும் முயற்சி என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் (அமலாக்கத் துறையினர்) அரவிந்த் கேஜ்ரிவால் வீடு, என்னுடைய வீடு, சஞ்சய் சிங் வீடு, சத்தியேந்திர ஜெயன் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், எங்கேயும் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

ஆனால், மோடியின் ஏஜென்ஸிகள் ஒன்றன் பின் ஒன்றாக போலி வழக்குகளை போடுவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியை உடைப்பதற்காக அவர்கள் எந்த அளவுக்கும் செல்வார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்றாலும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள், விலைபோக மாட்டார்கள், அஞ்சமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சீவ் அரோராவின் சகாவான சஞ்சய் சிங், “இந்தச் சோதனைகள் எல்லாம் ஆம் ஆத்மி தலைவர்களின் தைரியத்தை ஒருபோதும் தகர்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “மற்றுமொரு காலை, மற்றுமொரு சோதனை. ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சீவ் அரோராவின் வீட்டை அடைந்துள்ளனர். மோடியின் போலி வழக்குகளை உருவாக்கும் இயந்திரம் 24 மணி நேரமும் ஆம் ஆத்மி கட்சியினரின் வீடுகளுக்கு பின்னால் நிற்கிறது.

போலி வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை கண்டித்துள்ளது. ஆனால், மோடியின் ஏஜென்சிகள் எந்த நீதிமன்றத்துக்கும் கீழ்படியவில்லை. ஆம் ஆத்மி கட்சியினரின் துணிச்சல் முன்பு மோடியின் ஆணவம் முற்றிலும் தோற்றுப் போகும். மோடி ஜி, போலி வழக்குகள் மற்றும் சோதனைகளால் ஒருபோதும் ஒரு நேர்மையான கட்சியை உங்களால் உடைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...