விமான சாகச நிகழ்ச்சி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு…. தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு உயிரிழப்புக்கு காரணம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழகம்

விமான சாகச நிகழ்ச்சி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு…. தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு உயிரிழப்புக்கு காரணம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

விமான சாகச நிகழ்ச்சி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு…. தி.மு.க. அரசின்  நிர்வாக சீர்கேடு  உயிரிழப்புக்கு காரணம் –  எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யத் தவறிய தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இதன்மூலம், இந்தியாவில் அதிகப்படியான பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிகழ்ச்சி என்ற புதிய சாதனையை இது படைத்தது.விமானப் படையினரின் இந்த சாகச நிகழ்ச்சியைக் காண மெரினாவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துச் சென்றனர். இவ்வாறு வந்த மக்கள் அனைவரும், நிகழ்ச்சி முடிந்ததும், மொத்தமாக வீடு திரும்ப முற்பட்டதால் சென்னை சாலைகளில் கூட்டம் அலைமோதியது.

சாலைகள், ரயில் நிலையங்கள் அனைத்தும் ஸ்தம்பித்தன. மெரினாவை ஒட்டியுள்ள சாலைகளில் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் மயக்கம் அடைந்தனர். இதில் வெயிலில் சிக்கிய கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான், 56, மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தொடர்ந்து திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன், 34, என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தினேஷ் குமார், 37, சீனிவாசன் என்பவரும், மற்றொருவர் ராயப்பேட்டை மருத்துவமனையிலும்( இவரின் விபரம் தெரியவில்லை) உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. நெரிசலில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்து 3 மணி நேரமான பிறகும் சென்னை சாலைகளில் கூட்ட நெரிசல் குறைந்தபாடில்லை. அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டு விட்டது.சென்னையில் 21 ஆண்டுக்கு பிறகு வான் சாகச நிகழ்ச்சி நடந்தது; அதுவும் விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் திரண்டு வந்து விட்டனர். அரசு இதை முன் கூட்டியே எதிர்பார்த்து போதிய போக்குவரத்து வசதிகளை செய்திருக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டோரின் குமுறலாக உள்ளது.

அது மட்டுமின்றி இந்த சாகசத்தை காண வந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஸ், ரயில் கிடைக்காமல், உரிய நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்ட மக்கள், சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்யத் தவறிய தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது. இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு போலீசாரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடால் உருவான விடியா தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த ஸ்டாலின் அரசுக்கு என் கடும் கண்டனங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...