முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்ற நிபந்தனைகள் என்னென்ன..?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியது. இதுகுறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வெவ்வேறானவை.
எனவே, செந்தில் பாலாஜி சட்டபூர்வமாக அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை. இந்த வழக்கை விசாரித்து முடிப்பதற்கு ஏற்படும் காலதாமதம், நீண்ட நாட்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருவது, இந்த இரண்டு காரணங்களையும் அடிப்படையாக கொண்டுதான், உச்ச நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது, என்று கூறினார்
மேலும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்: > ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும், கட்டுப்பாடும் இல்லை.
> திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
> சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது.
> இந்த வழக்கில் செந்தில் பாலாஜி விசாரணை கைதியாகவே இருப்பதால், அவருடைய அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.
> ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும்.
> விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
> வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது, என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
திமுகவினர் கொண்டாட்டம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, புழல் சிறையின் வெளியே திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல், கரூரிலும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் திரண்ட திமுகவினர் அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, செந்தில் பாலாஜியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பி, நடனமாடி கொண்டாடினர். தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துகும் மேலாக அப்பகுதியில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், வருங்கால அமைச்சர், நிரந்தர அமைச்சர் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
முன்னாள் எம்எல்ஏ-வான காமராஜ், பாண்டியன் உள்ளிட்ட கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆருயிர் சகோதரர் @V_Senthilbalaji அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட…
— M.K.Stalin (@mkstalin) September 26, 2024
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது,
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave your comments here...