கால்வாய்களில் பொறுப்பின்றி வீசி எறியும் குப்பைகள் – தடுப்பு வலைகள் அமைத்து சென்னை மாநகராட்சி அகற்றம்…!
சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் பொதுமக்கள் சமூக பொறுப்பின்றி வீசி எறியும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி சார்பில் தடுப்பு வலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரப் பகுதிகளில் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு ஆகிய ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட 31 கால்வாய்கள் உள்ளன. இவற்றில் 14 கால்வாய்கள் மாநகராட்சிக்கு சொந்தமானது. இருப்பினும் அனைத்து கால்வாய்களிலும் ஆகாயத் தாமரை செடிகள் மற்றும் மிதக்கும் கழிவுகளை அகற்றுவது போன்ற பராமரிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இவற்றில் குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் கொடுங்கையூர் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், கொளத்தூர் தணிகாச்சலம் கால்வாய், மாம்பலம் கால்வாய், நுங்கம்பாக்கம் கால்வாய் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளை சமூக பொறுப்பின்றி வீசி எறிந்து வருகின்றனர்.
இவை கால்வாய்களில் அடிக்கடி அடைப்பை ஏற்படுத்தி, கழிவுநீர் இயல்பாக வழிந்தோடுவதை தடுக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, பொதுமக்களை பாடாய் படுத்துகிறது. அதை தடுக்க மாநகராட்சி பூச்சி கட்டுப்பாட்டு துறை தனியாக போராட வேண்டியுள்ளது. குப்பைகளை பொதுமக்கள், வீடு வீடாக வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்கள் மனதில் மாற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், கால்வாய்களில் அடித்து வரப்படும் மிதக்கும் கழிவுகளை தடுத்து அகற்றும் விதமாக மாநகராட்சி சார்பில் கால்வாய்களில் தடுப்பு வலைகளை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு தேங்கும் கழிவுகளை அவ்வப்போது கண்காணித்து அகற்றியும் வருகிறது. இவ்வாறு அடிக்கடி நீர்வழிக் கால்வாய்களில் குப்பை போடுபவர்களை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வருவதாகவும், விதிகளை மீறி குப்பை கொட்டுவருக்கு அபராதம் விதிப்பதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave your comments here...