தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் பொறுப்பேற்றார்..!
தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து முதல்வரின் தனிச் செயலராக இருந்த நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தமிழகத்தின் 50வது தலைமைச் செயலர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்.
1991 ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்த முருகானந்தம் தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சென்னையை சேர்ந்த இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சார் ஆட்சியராக தனது பணியை தொடங்கினார்.
2021-ல் திமுக அரசு அமைந்த பிறகு இரண்டு ஆண்டுகள் நிதித் துறை செயலாளராக இருந்தவர். முன்னதாக அதிமுக ஆட்சியின் போது தொழில்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார். அதே போல போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளிலும் செயலராக பொறுப்பு வகித்துள்ளார்.
முன்னதாக நேற்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைரவாக, தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் கட்டிடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் தலைவராக 2019-ம் ஆண்டு பிப்.8-ம் தேதி முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் இந்த ஆண்டு பிப்.10-ம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு சேய்வதற்கான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, கடந்த ஜூலை மாதம் தனது பரிந்துரையை அளித்தது. அந்த பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலை பெற்று, தற்போது தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்க முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலராக இருந்த சிவதாஸ் மீனா, நேற்று (ஆக.18) தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றதைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Leave your comments here...