முடா ஊழல் விவகாரம் – ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு..!
முடா ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தன்னை விசாரிக்க ஆளுநர் அனுமதி அளித்ததை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் அல்லது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதையடுத்து பார்வதியின் கோரிக்கைபடி, கடந்த ஆண்டு மைசூருவில் உள்ள விஜய நகரில் அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விலை அதிகமுள்ள இடத்தை ஒதுக்கியிருப்பதாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்அளித்தனர். முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தேவை என்பதால், சமூக ஆர்வலர்கள் மூவரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை தனித்தனியாக சந்தித்து புகார் அளித்தனர். அதில் முதல்வர் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினர்.
இதையடுத்து ஆளுநர் கடந்த 26-ம் தேதி, இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்குமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா, அமைச்சரவையைக் கூட்டி நோட்டீஸை திரும்ப பெற வலியுறுத்தினார். ஆளுநர் தனது நோட்டீஸை திரும்ப பெறாததால் சித்தராமையா, தான் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என ஆளுநருக்கு பதிலளித்தார்.
இந்த பதில் திருப்தி அளிக்காததால் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். இதுதொடர்பாக அவர் சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகிய மூவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், “ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 மற்றும் பிரிவு 218-ன் கீழ் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குதொடர அனுமதி அளிக்கப்படுகிறது. அவர் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த முதல்வர் சித்தராமையா, “எனக்கு எதிரான புகாரை முறையாக விசாரிக்காமல், என் மீது வழக்கு தொடர அவசர கதியில் ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இந்த முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது. இதனை எதிர்த்து சட்டரீதியாக போராடுவேன். பாஜக ஆட்சியில் வகுக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே எனது மனைவிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் எனது தவறு எதுவும் இல்லை. நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது. காங்கிரஸ் அரசை சீர்குலைக்க பாஜகவும் மஜதவும் இணைந்து சதித்திட்டம் தீட்டியுள்ளன. காங்கிரஸ் மேலிடமும், அமைச்சரவையும் எனக்கு ஆதரவாக உள்ளன” என்று தெரிவித்திருந்தார்.
Leave your comments here...