நிதி நிறுவன மோசடி – தேவநாதன் யாதவ் கைது..!
நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தததாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் இன்று (ஆக.13) கைது செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவரான தேவநாதன் யாதவ் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களிடம் பணத்தை பெற்றுள்ளார்.
இதில், பல கோடிக்கு மேல் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், அறந்தாங்கியில் கோயில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னைக்கு செல்வதற்காக புதுக்கோட்டை சாலையில் தேவநாதன் யாதவ் செல்வதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவரை காரில் சென்றபோது மறித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தேவநாதனை திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். விசாரணை முடிவடைந்த பின்பு அவர் சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.சென்னையில் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராக சிவகங்கையில் வேதநாதன் யாதவ் போட்டியிட்டிருந்தார்.தேர்தலில் போட்டியிட தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.305 கோடி எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...