காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..? முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!

தமிழகம்

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..? முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..? முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!

“காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும். மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே எடப்பாடி – ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே நகராட்சி துவக்கப்பள்ளி, இ-சேவை மையம், நூலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து இரண்டு மர்ம பொருள் விழுந்து வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது, விழுந்த மர்ம பொருள் திடிரென் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக, பற்றி எறிந்த தீயை அணைத்த காவலர்கள், காவல் நிலைய வளாகத்துக்கு வெளியே சென்று பார்த்துள்ளனர். அங்கு யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர்கள் காவல் நிலையத்துக்குள் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சங்ககிரி டிஎஸ்பி-யான ராஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், காவல் நிலையத்துக்குள் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு போன்ற பொருளை வீசியது தெரியவந்தது.

அண்மையில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலர் மீது எடப்பாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபரைப் பிடிக்க சங்ககிரி டிஎஸ்பி-யான ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த திமுக ஆட்சியில் ஏற்படுகிறது. காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும்.

மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது, சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது , சட்டம் – ஒழுங்கை காத்திடவும், தொழில் முதலீட்டை தக்க வைக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...