8 நாட்களில் திருத்தணி முருகன் கோயிலில் உண்டியலில் பக்தர்கள் 1.96 கோடி காணிக்கை..!
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், கோயில் உண்டியல்களில் பக்தர்கள் 1.96 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர். திருத்தணியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் கடந்த 26ம் தேதி முதல் 31ம் தேதிவரை 5 நாட்களுக்கு ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நிகழ்ச்சிகள் மிக விமரிசையாக நடைபெற்றன.
இதில் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளை செலுத்தி முருகனை வழிபட்டனர். பின்னர், கோயில் உண்டியல்களில் நகை, பணம், வெள்ளி போன்ற காணிக்கை பொருட்களை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா முடிந்து 8 நாட்களில், நேற்று கோயில் வளாகத்தில் உள்ள தேவர் மண்டபத்தில் வைத்து உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இப்பணிகளை கோயில் இணை ஆணையர் மேற்பார்வையில், ஆங்காங்கே சிசிடிவி காமிரா கண்காணிப்புடன் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நேற்றிரவு காணிக்கை எண்ணும் பணி நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து கோயில் திருப்பணிகளுக்காக உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கை 6.09 லட்சம் உள்பட மொத்த ரொக்கப் பணமாக 1.96 கோடி, 185 கிராம் தங்கம், 13 ஆயிரம் வெள்ளி பொருட்கள் பக்தர்களால் செலுத்தப்பட்டு உள்ளது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர்.
Leave your comments here...