வயநாடு நிலச்சரிவு..பலி எண்ணிக்கை 295 ஆக உயர்வு – ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் – பிரதமர் மோடிக்கு அனுப்பினார்..!
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ராணுவம், விமானப்படை, கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் போராடி வருகின்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 295-ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் சேறும், சகதியும் நிறைந்து இருப்பதால், மீட்பு பணியில் பெரும் சவால் இருந்து வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. பலர் மாயமாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக, நதியின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற உள்ளது. சூரல்மலையில் நடைபெற்ற மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைய உள்ளன.
இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் பலியான, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் பலியான சோக சம்பவத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்
அதில், கேரள நிலச்சரிவு சோகத்திற்கான மிக உண்மையான இரங்கல்களை ஏற்று கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு இரக்கம் மற்றும் ஆதரவான வார்த்தைகளை தெரிவிக்கவும் மற்றும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...