E- நீதிமன்றங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு..!
தேசிய மின்னணு நிர்வாக திட்டத்தின் ஒரு பகுதியாக இ- நீதிமன்றங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அளித்த பதிலில் தேசிய மின்னணு நிர்வாக திட்டத்தின் ஒரு பகுதியாக இ- நீதிமன்றங்கள் வெகு வேகமாக செயல்பாட்டுக்கு வருகின்றன. முதல் கட்டத்தில் ரூ.935 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.639.41 கோடி செலவில் மாவட்ட, கீழமை நீதிமன்றங்கள் கணினி மயம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்டத்தில் ரூ.1670 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ரூ.1668.43 கோடி செலவிடப்பட்டது. இந்தக் கட்டத்தில் 2023 வரை 18,735 நீதிமன்றங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, புதுச்சேரியை உள்ளடக்கிய சென்னை உயர்நீதிமன்ற வரம்புக்குள் மொத்தம் 1148 இ- நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை 1124 ஆகவும், புதுச்சேரியின் எண்ணிக்கை 24 ஆகவும் உள்ளது.
இ- நீதிமன்றங்கள் திட்டத்தின் 3-வது கட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.7210 கோடி நிதி ஒதுக்க மத்தியஅமைச்சரவை 13.09.2023 அன்று ஒப்புதல் அளித்தது. நான்காண்டு காலத்தில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு 2024-25-ம் நிதியாண்டில் ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டு 2024, ஜூலை வரை ரூ. 465.74 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
Leave your comments here...