சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை… 2025-ல் பயன்பாட்டுக்கு வருவதாக மத்திய அமைச்சர் தகவல்…!

இந்தியா

சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை… 2025-ல் பயன்பாட்டுக்கு வருவதாக மத்திய அமைச்சர் தகவல்…!

சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை… 2025-ல் பயன்பாட்டுக்கு வருவதாக மத்திய அமைச்சர் தகவல்…!

சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் : 261.70 கிமீ தொலைவுள்ள (தமிழ்நாட்டில் உள்ள 105.7 கிமீ தொலைவு உட்பட) சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை, ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 61.74% அளவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்படும். இந்தத் திட்டம் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை – பெங்களூரு இடையேயான பயணத் தொலைவு மற்றும் நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான ஈரடுக்கு நான்குவழி உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகள், பல்வேறு கட்டங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டு மே மாதத்துக்குள் முடிக்கப்படும். சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை மற்றும் காரைப்பேட்டை – வாலாஜாப்பேட்டை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர் பணிகள் 98.5% முடிவடைந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை இடையிலான பணிகள் 56.92% அளவுக்கும், காரைப்பேட்டை – வாலாஜாபேட்டை பணிகள் 74.90% அளவுக்கும் முடிவடைந்துள்ளது. இந்தப் பணிகள் 2025 மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும். இது தவிர, சென்னை – திருப்பதி, மாமல்லபுரம் – முகையூர், தருமபுரி – தொரப்பள்ளி, பொள்ளாச்சி – மடத்துக்குளம், திண்டிவனம் – கிருஷ்ணகிரி, மேலூர் – காரைக்குடி, விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு, ஒட்டன்சத்திரம் – பழனி, திருமங்கலம் – வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

Leave your comments here...