ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி..!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை தேசிய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஈடுபட்டதாக கூறி அவர் மீது அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து கடந்த ஜூன் 26-ம் தேதி கைது செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜூலை 17-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அமலாக்கத் துறை காவல் முடிந்து ஜாபர் சாதிக் இன்று (ஜூலை 19) மாலை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணை நிறைவடையாததால் மேலும் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென கோரினார்.
அதையேற்க மறுத்த நீதிபதி எஸ்.அல்லி, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை மேலும் நான்கு நாட்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வரும் ஜூலை 23-ம் தேதி மாலை ஜாபர் சாதிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Leave your comments here...