கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் காணவில்லை – சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா குற்றச்சாட்டு..!
கேதார்நாத் கோயிலில் இருந்து 228 கிலோ தங்கத் தகடு காணாமல்போனதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படாதது ஏன் என்று சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தராகண்டில் உள்ளஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நேற்று மும்பை வந்திருந்தார். மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரேவை அவரது வீட்டில் சந்தித்தார்.
இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. இதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் பற்றிய குறிப்புகளும் உள்ளன. எனவே அதேபோன்ற கோயிலை வேறு இடத்தில் எழுப்ப முடியாது. கேதார்நாத் கோயில் கருவறை சுவர்களில் தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. இதில் 228 கிலோ தங்கத் தகடு காணாமல்போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தப் புகாரை கேதார்நாத் கோயில் பண்டிதர்களில் ஒருவரான சந்தோஷ் திரிவேதி கடந்த மாதம் எழுப்பியிருந்தார். இவர் சார்தாம் யாத்திரை பஞ்சாயத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். மூத்த பண்டிதரான இவர், கோயிலின் கருவறை சுவர்களில் இருந்த தங்கத் தகடுகள், பித்தளை தகடுகளாக மாற்றப்பட்டுள்ளதாக புகார்கூறினார். இதற்கு அக்கோயிலை நிர்வகிக்கும் பத்ரிநாத் கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழுவே பொறுப்பு எனவும் அவர் கூறியிருந்தார்.
கோயில் நிர்வாகம் மறுப்பு: இந்தப் புகாரை அப்போதே மறுத்த கோயில் நிர்வாகக்குழு, இது திட்டமிட்ட சதி அடிப் படையிலானப் புகார் என்று கூறியிருந்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...