இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு – பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து..!!
மகாராஷ்டிராவில் பல்வேறு புகார்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளான பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இருந்து 2022-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி.தேர்வில் வெற்றி பெற்று புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக சேர்ந்த பூஜா கேட்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவர் புனேயில் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது, பல்வேறு சலுகைகள் கொடுக்கவேண்டும் என்று கூறி தனது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தந்தை மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
இச்சர்ச்சையை தொடர்ந்து அப்பெண் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதோடு, அவர் செய்த தில்லுமுல்லு வேலைகளும் வெளியில் வந்தது. தனக்கு பார்வை குறைபாடு இருப்பதாக போலியான சான்றிதழ் பெற்று மாற்றுத்திறனாளி என தேர்வில் இடஒதுக்கீடு பெற்றார். அதோடு சாதி இட ஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்து காட்டி அதற்கான சலுகைகள் பெற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஐ.ஏ.எஸ். பயிற்சியில் உள்ள போதே ஆடி காரில் சைரனுடன் சென்றது, தனி அறை கேட்டது என பூஜா சர்ச்சைக்குள்ளானார். இந்நிலையில் எம்பிபிஎஸ் படிப்பதற்காக 2007-ம் ஆண்டில் அவர் ஓபிசி இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பதுதெரியவந்துள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்லூரி இயக்குநர் அர்விந்த் போரே கூறியதாவது: ஓபிசி நான்-கிரீமி லேயர் பிரிவில் பூஜா கேத்கர் படிப்பில் சேர்ந்தார். அவர் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரியில் சேர்ந்தார். அவர் சமர்ப்பித்த மருத்துவத் தகுதிச் சான்றிதழில் அவருக்கு எந்தவிதமான குறைபாடும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அவர் மாற்றுத் திறனாளி கிடையாது. இவ்வாறு அர்விந்த் போரே தெரிவித்தார்
இது குறித்து மத்திய மாநில அரசுகள் விசாரித்து வந்த நிலையில், பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பை மத்திய அரசு ரத்து செய்தது. சர்ச்சைக்குள்ளான பூஜா ஹெட்கர், முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் 23-ம் தேதிக்குள் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave your comments here...