பயிற்சி IAS அதிகாரி பூஜா பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல். – மோசடி செய்திருந்தால் பூஜா பணி நீக்கம்..!

இந்தியா

பயிற்சி IAS அதிகாரி பூஜா பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல். – மோசடி செய்திருந்தால் பூஜா பணி நீக்கம்..!

பயிற்சி IAS அதிகாரி பூஜா பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல். – மோசடி செய்திருந்தால் பூஜா பணி நீக்கம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் பூஜா கேட்கர். பயிற்சியின் போது இவர் தனக்கு தனி அலுவலக அறை, காருக்கு வி.ஐ.பி. எண், தனி தங்குமிடம், உதவியாளர் வேண்டும் என கேட்டு அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இதுபோன்ற வசதிகள் கொடுக்கப்படுவதில்லை. இருந்தாலும் அவர் இந்த வசதிகளை கேட்டு உயர் அதிகாரிகளை நச்சரித்து வந்துள்ளார்.

இதற்கிடையே புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறையை ஆக்கிரமித்து கொண்ட பூஜா கேட்கர், அறைக்கு வெளியே இருந்த கூடுதல் கலெக்டரின் பெயர் பலகையை தூக்கிவிட்டு தனது பெயர் பலகையை மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஒப்பந்ததாரர் ஒருவர் கொடுத்த விலையுயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.

பூஜா கேட்கரின் அடாவடித்தனம் எல்லை மீறி போகவே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வாசிம் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடிக்க அவருக்கு மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

பூஜா கேட்கர் தொடர்பாக புனே மாவட்ட கலெக்டர் சுகாஸ் திவசே மாநில அரசிடம் அளித்து உள்ள அறிக்கையில், “பூஜா கேட்கர் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடந்து கொள்ளவில்லை. அதிகமாக மரியாதை எதிர்பார்க்கிறார். அவரது தந்தை, மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என உள்ளூா் அதிகாரிகளை மிரட்டுகிறார்” என குறிப்பிட்டு உள்ளார். பூஜா கேட்கரின் தந்தை ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஆவார். இதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு பார்வை மற்றும் மன இறுக்க குறைபாடு உள்ளதாக தெரிவித்தும் மாற்றுத்தினாளிகளுக்கான பிரிவில் (பி.டபிள்யூ.பி.டி) இவர் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்துள்ளது.

ஆனால் அவரது தந்தை முன்னாள் அரசு உயர் அதிகாரி என்பதும், அவருக்கு 40 கோடியில் சொத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. பணி நியமனத்துக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய மருத்துவ பரிசோதனையில் இவர் ஆஜராகவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த, மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் கூடுதல் செயலாளர் மனோஜ் திவிவேதி தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழு பூஜா கேத்கர், எவ்வாறு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி சான்றிதழ் பெற்றார், பார்வை குறைபாடு மற்றம் மனகுறைபாடு சான்றிதழ் ஆகியவை உண்மையானதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்.

இதில் பூஜா தெரிவித்த விவரங்கள் பொய் என தெரியவந்தால் அவரை மகாராஷ்டிரா அரசு பணி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்படலாம் என்றும், அவர் மீது குற்ற வழக்கு தொடரப்படலாம் எனவும் மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் புனேவில் பணிபுரிந்த போது பூஜா கேத்கர் பயன்படுத்திய சைரன் பொருத்தப்பட்ட சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave your comments here...