அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் – திமுக பிரமுகர் உட்பட 9 பேர் கைது

அரசியல்

அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் – திமுக பிரமுகர் உட்பட 9 பேர் கைது

அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் – திமுக பிரமுகர் உட்பட 9 பேர் கைது

சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியை அடுத்த தாகூர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 64). இவர் கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் இவர் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் எதிரே உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து மாரியம்மன் கோவில் வீதி வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

வீட்டுக்கு சில அடி தூரத்தில் வந்த போது அவரை நோட்டமிட்டபடி 2 மோட்டார் சைக்கிள்களில் சிலர் கும்பலாக எதிரில் திடீரென வந்தனர். அவர்கள் சண்முகத்தின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மோட்டார் சைக்கிள்களை குறுக்காக நிறுத்தினர். பின்னர் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சண்முகத்தை சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். இதைபார்த்த கொலையாளிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த கொலையை அறிந்த சண்முகத்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்தனர்.

கொலை செய்யப்பட்ட சண்முகத்திற்கு 2 மனைவிகள் உள்ளார்கள். அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் கஞ்சா புழக்கமும், லாட்டரி விற்பனையும் இருந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவும் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலத்தில் இரவில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி உடல் பிரேத பரிசோதனக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர். சண்முகத்தின் உறவினர்கள் மற்றும் மனைவிகள் மகன்கள் மகள்கள் கதறி அழுதபடியே உள்ளனர். ஆஸ்பத்திரி பிணவறை முன்பு முன்னாள் அமைச்சர் செம்மலை, விஜயலட்சுமி பழனிச்சாமி சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜி.வெங்கடாசலம், எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியன், ராஜமுத்து மற்றும் கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் உள்ளனர் .

இதற்கிடையே கொலையை அரங்கேற்றிய கும்பல் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் தங்களது உருவம் பதியாமல் இருக்க சிசிடிவி கேமராக்களை முதலில் அடித்து உடைத்துள்ளனர் . மேலும் அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இந்த கொடூர சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதனால் திட்டமிட்டு கைதேர்ந்த கும்பலும் கூலிப்படையை சேர்ந்தவர்களும் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.கொலை குற்றவாளிகளை பிடிக்க துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கொலை தொடர்பாக ஆறு பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக நிர்வாகி சண்முகம் படுகொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி சண்முகத்தின் முதல் மனைவி பரமேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை அதிக அளவில் எங்கள் பகுதியில் நடைபெறுகிறது. இதனை தடுத்து பொதுமக்கள் நலமுடன் வாழ எனது கணவர் வழிவகை செய்தார். அதனை பொறுக்காத சிலர் இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளனர் .எனது கணவர் யாருக்கும் கேடு விளைவிக்கவில்லை. சிறுவர்கள் கூட அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்கிறார்கள்.போலீஸ் கண்டுகொள்வதில்லை. தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் . எனது கணவர் கொலையில் முக்கிய குற்றவாளியான அந்த லாட்டரி விற்பவரை கைது செய்ய வேண்டும் யாரையோ 3 பேரை பிடித்துள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்.

இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் கொலை செய்யப்படும் காட்சிகள் பதிவாகாமல் இருக்க அந்த பகுதியில் உள்ள கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது இதனால் கூலிப்படையை வைத்துதான் இந்த கொலையை அரங்கேற்றி இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் யார் என்று தெரியவில்லை கொடூரமாக நடந்த இந்த கொலையை பார்த்த சிலர் கதவை பூட்டி கொண்டனர் கொலை நடக்கும் போது அந்த பகுதியினர் யாரும் கதவை கூட திறக்கவில்லை கதவை திறந்து இருந்தால் எனது கணவர் உயிர் பிழைத்திருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

திமுக பிரமுகர் உட்பட 9 பேர் கைது

இந்த நிலையில், அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக பிரமுகர் சதிஷ் சேலம் மாநகராட்சியின் 55-வது வார்டு கவுன்சிலரின் கணவர் ஆவார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Leave your comments here...