மதுரையில் மெட்ரோ ரயில் சேவை – வழித்தட பகுதியில் அதிகாரிகள் குழு ஆய்வு..!

தமிழகம்

மதுரையில் மெட்ரோ ரயில் சேவை – வழித்தட பகுதியில் அதிகாரிகள் குழு ஆய்வு..!

மதுரையில் மெட்ரோ ரயில் சேவை – வழித்தட பகுதியில் அதிகாரிகள் குழு ஆய்வு..!

மதுரையில் ரூ.11,360 கோடியில் நிறைவேற்றப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தட பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என கடந்த 2021-ல் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, திருமங்கலம் – மதுரை ஒத்தக்கடை வரையிலும் சுமார் 31 கி.மீ தொலைவுக்கு வழித்தடம் அமைக்கப்படுகிறது. தமிழக பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்காக ரூ.8,500 கோடி அறிவிக்கப்பட்டது. இருப்பினும், விரிவான திட்ட அறிக்கையின் முடிவில் அத்தொகை ரூ.11,360 கோடியாக உயர்த்தப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இத்திட்டத்திற்கான நிதியை ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களிடம் தொடர் முயற்சியில் மத்திய – மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் மதுரையில் மெட்ரோ வழித்தட பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு இவ்வங்கி கடன் அளித்துள்ளதால் அதற்கான தொடர் ஆய்வு பணி நிமித்தமாக நேற்று சென்னை வந்திருந்த அவ்வங்கி அதிகாரிகள் குழு, இன்று மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டனர். இதன்படி, இன்று மதுரை வந்த அக்குழுவினர் மதுரை ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், மதுரை ரயில்வே நிலையம், 4 மாசி வீதிகள், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மெட்ரோ வழித்தட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொதுமேலாளர் ரேகா, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் போக்குவரத்து மூத்த நிபுணர் வெங்கிகு உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திட்ட இயக்குநர் அர்ச்சுனன், ”மெட்ரோ திட்டத்திற்கு நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நிதியளிக்கும் வங்கிகளில் ஒன்றான ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் குழுவினர் முதல் கட்டமாக திட்டம் குறித்து இன்று ஆய்வு செய்துள்ளனர்.

இன்னொரு முறையும்கூட இக்குழு ஆய்வுக்கு வரலாம். அதன்பின், நிதி வழங்குவது பற்றி அக்குழு முடிவெடுத்து நிதி அளிப்பது பற்றி தகவல் தெரிவிக்கப்படும். திட்டப்பணிக்கான முறையான (அப்ரூவல்) அனுமதி கிடைத்தபின், நிலம் கையகப்படுத்தப்படும். அதன் பிறகே கட்டுமானம் தொடங்கும்” என்றார்.

Leave your comments here...