நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல் – முக்கிய மாற்றங்கள் என்னென்ன..?

இந்தியா

நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல் – முக்கிய மாற்றங்கள் என்னென்ன..?

நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல் – முக்கிய மாற்றங்கள் என்னென்ன..?

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

1. பாரதிய நியாய சன்ஹிதா, 2023: இந்திய தண்டனைச் சட்டம் 1860-க்கு மாற்றான இந்தப் புதிய சட்டத்தில் தேசத் துரோகம் என்பது நீக்கப்படுள்ளது. மாறாக, பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்துக் கொலை செய்வதற்கு மரண தண்டனை வழங்க வகை செய்கிறது. முதல் முறையாக இந்த தண்டனைகளில் ஒன்றாக சமூக சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது.

2. பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023: இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் வருமானம் மற்றும் சொத்துக்களை இணைக்கும் புதிய வழிமுறை இணைக்கப்பட்டுள்ளது.

3. பாரதிய சாக்‌ஷியா 2023: இது இந்திய சாட்சிகள் சட்டம் 1972-க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகளில், மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை அடங்கும். வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல்மயாக்கப்பட வேண்டும். காகித ஆவணங்களைப் போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களும் சட்ட அங்கீகாரம், மதிப்பு, அமலாக்கத்தன்மை பெறும்.

மூன்று சட்டங்களின் கீழ் செய்யப்பட்டுள்ள 10 முக்கிய மாற்றங்கள்:

1. புதிய சட்டத்தின்படி கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். வழக்கின் முதல் விசாரணையில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டினை பதிவு செய்ய வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் சாட்சியங்களைப் பாதுகாக்க உரிய ‘சாட்சி பாதுகாப்புத் திட்டங்களை’ செயல்படுத்த வேண்டும்.

2. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை பெண் காவல் அதிகாரி பதிவு செய்வார். அப்போது பாதிக்கப்பட்ட நபரின் பாதுகாவலர் அல்லது உறவினர் உடன் இருக்கலாம். உரிய மருத்துவ அறிக்கைகள் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

3. இந்தப் புதிய சட்டத்தின்படி சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றத்துக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை வாங்குதல், விற்பனை செய்தல் கடுங்குற்றமாகக் கருதப்படுகிறது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

4. திருமண ஆசைகாட்டி பெண்களை ஏமாற்றி கைவிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.

5. பெண்களுக்கு எதிரான குற்றங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழக்கு குறித்த அவ்வப்போதைய தகவல்களை வழக்கு பதிவான முதல் 90 நாட்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகளுக்கு ஒலவச மருத்துவ முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சை வழங்குவது கட்டாயமாகும்.

6. குற்றவாளி, பாதிக்கப்பட்ட நபர் என இருதரப்புமே வழக்கு பதியப்பட்ட 14 நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கையின் நகல், போலீஸ் அறிக்கை, குற்றச்சாட்டு, வாக்குமூலங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் என அனைத்தையும் பெற தகுதியானவர்களாவர். கிரிமினல் வழக்குகளில் இரண்டு வாய்தாக்கள் மட்டுமே நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணையில் தேவையற்ற தொய்வைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

7. குற்றச் சம்பவங்கள் பற்றி மின்னணு சாதனங்கள் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். இதன்மூலம் காவல் நிலையத்துக்குத்தான் நேரில் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் தவிர்க்கப்படும். அதேபோல், ஜீரோ எஃப்ஐஆர் (Zero FIR) அமலுக்கு வருகிறது. இதன் மூலம் காவல் சரக பிரச்சினையைக் கடந்து எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படலாம்.

8. கைது செய்யப்பட்ட நபர் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப தங்களின் நிலை பற்றி யாரேனும் ஒருவருக்கு தகவல் அளிக்கும் உரிமை உள்ளது. அவர்களுக்கான உடனடி உதவிக்காக இது அமல்படுத்தப்படுகிறது. கைது விவரங்கள் காவல் நிலையத்திலும், மாவட்ட தலைமையகத்திலும் முறையாகத் தெரிவிக்கப்படும். இதன்மூலம் கைது தகவலை அந்த நபரின் உறவுகள், நட்புக்கள் அறிந்து கொள்ள முடியும்.

9. மிகவும் மோசமான கிரிமினல் குற்றச் சம்பவங்களின்போது நிகழ்விடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் செல்வது கட்டாயமாக்கப்படுகிறது. சம்மன்களை மின்னணு உபகரணங்கள் வாயிலாகவும் அனுப்பலாம். இதன்மூலம் வழக்கு விசாரணையில் வீண் தொய்வைத் தடுக்க இயலும். அதேபோல் மிக மோசமான குற்றச் செயல்களில், நிகழ்விடத்தினை வீடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.

10. பாலினத்தின் விளக்கமானது இப்போது மாற்றுப் பாலினத்தவரையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான சில குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபரின் வாக்குமூலத்தை வாய்ப்பிருக்கும் இடத்தில் மாவட்ட பெண் நீதிபதி பதிவு செய்து கொள்வார். ஒருவேளை பெண் மாஜிஸ்திரேட் இல்லாதபட்சத்தில் ஆண் மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொள்ளலாம். இருப்பினும் அவ்விடத்தில் இன்னொரு பெண் இருப்பது அவசியமகும். பாலியல் வன்கொடுமை தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் காணொலி வாயிலாக பதிவு செய்யப்பட வேண்டும்.

புதிய குற்றவியல் சட்டங்கள்  :- இன்று அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் சட்டங்களின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோடு மட்டுமில்லாமல், குற்றவியல் நீதி முறையை சுதந்திரமாக மாற்றியுள்ளது. இந்தச் சட்டங்கள் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே உள்ளன. இவை சுவதேசி சட்டங்கள். முன்பு பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல் துறையின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது ​​புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களால் பலர் பயனடைவார்கள்.” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.

புதிய சட்டங்களின்படி தண்டனைகளைவிட நீதியை நிலைநாட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமித் ஷா கூறினார். அதேவேளையில் ஜூலை 1-க்கு முன்னர் பதியப்பட்ட கிரிமினல் வழக்குகளில் விசாரணை பழைய சட்டங்களின்படியே நடைபெறும் என்றார்.

Leave your comments here...