அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம்.. அதிமுகவில் சாதி பார்க்கும் பழக்கம் வந்துவிட்டது – என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது – சசிகலா பேட்டி
ஜெயலலிதா ஜாதி பார்த்து பழகியவர் அல்ல.ஆனால் அதிமுகவில் தற்போது குறிபிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கிறார்கள். நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன். அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது.’’ என்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
‘எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவும் நானும் பல இன்னல்களை சந்தித்து, மிகப்பெரிய இயக்கமாக அதிமுகவை கட்டமைத்தோம்.இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாக்கினோம். ஆனால் இன்று அதிமுக தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், ஒருசில சுயநலவாதிகள் கட்சியை இந்த அளவிற்கு எடுத்துச்சென்றுள்ளனர். இதை எல்லாவற்றையும் நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
யாரையும் கட்சியில் இருந்து நீக்க கூடாது என்பார் எம்ஜிஆர். ஆர்எம் வீரப்பன் போன்றோர் ஜெயலலிதாவுக்கு தொந்தரவுகளை தந்ததை எம்ஜிஆர் அறிந்திருந்தார். ஆனாலும், யாரையும் அவர் கட்சியில் இருந்து நீக்கவில்லை.
எனக்கென்று சொந்த ஊர், சொந்த சாதி இல்லை. அதிமுகவில் வாரிசு அரசியலும், சாதி அரசியலும் கிடையாது. ஆனால், அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி அரசியல் செய்கின்றனர். அதிமுகவில் சாதி அரசியல் செய்வதை தொண்டர்கள் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நானும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். சாதி அரசியல் செய்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பேனா?.
இன்றைக்கு நிலைமை என்ன.. அதிமுக 3வது மற்றும் 4வது இடத்துக்கு சென்றுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு. அதனால் தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்க வேண்டாம் என்பதே அனைவரின் எண்ணமும். அதிமுகவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. நான் இத்தனை நாள் சொன்னது வேறு. நமது நேரம் கனிந்து வந்துள்ளது. நான் சொல்லி வந்த நேரம் இதுதான். தமிழக மக்கள் அதிமுக பக்கம் இருப்பார்கள்.
அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. என் பின்னால் தொண்டர்களும், மக்களும் இருக்கிறார்கள். அதனால் 2026ல் அதிமுக ஆட்சியை தனிப்பெரும்பான்மையுடன் அமைப்போம்.
நான் எப்போதும் அதிகம் பேச மாட்டேன். முக்கியமான நேரத்தில் தான் குரல் கொடுப்பேன். அந்த சமயம் இப்போது வந்துவிட்டது. அதனால், இனி அதிமுக தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். பட்டிதொட்டி எல்லாம் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். திமுகவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்றால் நாங்கள் வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். அதனை நன்கு புரிந்தவர் என்பதால் நான் அவசரப்படவில்லை. எனக்கு ஒரு கண் அதிமுக என்றால், இன்னொரு கண் தமிழக மக்கள். இடைத்தேர்தலை புறக்கணித்தது இந்த சூழலில் சரியில்லை. பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான்.
ஜெயலலிதா நம்மை விட்டு சென்ற போது சில விஷயங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததை செய்ய வேண்டும் என்பதைதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்ன சலசலப்பு வந்தாலும் எனது பார்வை அந்த இலக்கு நோக்கி நேராக இருக்கிறது. மக்களுக்காக நான் 40 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். மீதி காலமும் அது தொடரும். இன்று அதிமுக நான்காக பிரிந்து இருக்கலாம். எல்லோரும் ஒன்றாக சேருவார்கள். இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது இந்த நேரத்தில் சரியில்லை, மிகப்பெரிய தவறு.
திமுக ஆட்சி நான்காவது ஆண்டு நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை பள்ளி மாணவர்களுக்கு மடி கணினி வழங்கவில்லை. இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் இதைக் கேட்காவிட்டாலும் நான் எதிர்க்கட்சி தான். நான் கேட்பேன். மடியில் கனமில்லா, வழியில் பயமில்லை. அதை கேட்கும் துணிச்சல் எனக்கு இருக்கிறது. கோடநாடு வழக்கு ஏன் ஆமை வேகத்தில் செல்கிறது. அதை ஏன் இந்த அரசால் வேகமாக விசாரிக்க முடியவில்லை. ஒரு பொறுப்புள்ள முதல்வர் ஏன் தேர்தல் வரும் போது மட்டும் கோடநாடு குறித்து பேசுகிறார். விசாரணை நடத்தி யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. இதற்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்ததற்கு திமுக தான் காரணம்.’’ என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Leave your comments here...