சாகித்ய அகாடமியின் விருது – தமிழ்ப்பிரிவில் எழுத்தாளர் யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமன் தேர்வு..!
இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ எழுத்தாளர் யூமா வாசுகிக்கும், ‘யுவ புரஸ்கார்’ விருது எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’விருது டெல்லியில் இன்று (ஜூன்.15) அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் யூமா வாசுகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற நூலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் யூமா வாசுகி. இவரது இயற்பெயர் தி.மாரிமுத்து. மொழிபெயர்ப்பாளர், ஓவியர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். 2017-ம் ஆண்டு, மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’ நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்ய அகாடமி விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
‘யுவ புரஸ்கார்’ விருது: இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதி வரும் 35 வயதுக்குட்பட்ட இளம் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் ‘யுவ புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது. 2024-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் எழுதிய ‘விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் ரகுராமன். பெங்களூருவில் கணினி தொழில்நுடப்த்துறையில் பணிபுரிந்து வருபவர். விஷ்ணு வந்தார், நீர் பதுமராகம், அரோமா, அது நீ போன்ற இவரது பல்வேறு படைப்புகள் அதிக கவனம் பெற்றவை.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, செப்புப் பட்டயம் ஆகியவை கொண்ட விருது புதுடெல்லியில் பின்னர் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து :- சாகித்ய அகாடமியின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் யூமா வாசுகிக்கும், ‘யுவ புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கெனவே சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக பாலசாகித்ய புரஸ்கார்க்கும் (BalSahityaPuraskar) தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் இன்னும் வளம்பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர் ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் இது, வாழ்த்துகள்.
காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாகத் தடம் பதித்து, ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார்க்குத் (YuvaPuraskar) தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் எனது பாராட்டுகள்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
Leave your comments here...