பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜனவரி 9ம் தேதி உள்ளூா் விடுமுறை..!
தாணு, மால், ஐயன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே தாணுமாலயனாகக் காட்சிதரும் புனிதத் தலம், சுசீந்திரம். இங்குதான் தேவர்களின் தலைவன் இந்திரன் சாப விமோசனம் பெற்றார். கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில், அதிக நாள்கள் திருவிழா நடக்கும் இந்தக் கோவிலில், மார்கழி மாதம் 10 நாள்கள் நடக்கும் திருவிழாவில், பெரிய சுவாமி தேர் உள்ளிட்ட 4 தேர்கள் ஓடும். அடுத்ததாக, சித்திரை மாதம் நடக்கும் 10 நாள் திருவிழாவில், சுவாமி தேர் தவிர மீதமுள்ள 3 தேர்கள் ஓடும். ஆவணி மாதம் மற்றும் மாசி மாத திருவிழாக்களின்போது, ஒரு தேர் ஓடும். மாசி மாதத் திருவிழா 9 நாள்கள் மட்டுமே நடத்தப்படும்.
இதைப்போல இந்த ஆண்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (ஜன.9) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் மாா்கழி திருவிழா தேரோட்டம் ஜன.9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களைக் கொண்டு இயங்கும். இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் பிப்.8இல் 2 ஆவது சனிக்கிழமை மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...