விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் – சுற்றுலா பயணிகள் செல்ல தடை…!
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 1-ந்தேதி வரை தியானத்தில் ஈடுபடுகிறார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நாளை மாலை 3.55 மணிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறார்.கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர் கார் மூலம் படகு தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து தனி படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார்.
பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார். 3 நாட்கள் தியானத்திற்கு பின்பு 1-ந்தேதி தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார். பின்பு படகு மூலம் கரை திரும்பும் பிரதமர் மோடி மாலை 3.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்றவற்றில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரியில் நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஹெலிகாப்டர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தரையிறங்கி விட்டு மீண்டும் திருவனந்தபுரத்துக்கு சென்றது.கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அந்த பகுதி முழுவதும் மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொண்டனர். விவேகானந்தர் மண்டபத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளதையடுத்து நாளை முதல் ஜூன் 1-ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...