வெற்றியைக் கொண்டாடத் தயாராகுங்கள்… 3வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் – அண்ணாமலை
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி இடையே மும்முனை பலப்பரீட்சை நிலவியது.
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் 19 தொகுதிகளில் பாரதிய ஜனதாவும் மற்ற தொகுதிகளில் அதன் தோழமை கட்சிகளும் போட்டியிட்டன.40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள். ஆனால் இந்த தடவை தமிழகத்தில் பாரதிய ஜனதா மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலின் போது மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு தொகுதியிலும் பணம் செலவழிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக கட்சி மேலிடம் சார்பில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுக்காக ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதாவில் சர்ச்சை வெடித்தது. தொகுதிகளில் செலவு செய்ய வழங்கப்பட்ட பணத்தை முக்கிய நிர்வாகிகள் பலர் லட்சக்கணக்கில் பதுக்கி முறைகேடுகள் செய்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக பாரதிய ஜனதா மேலிட தலைவர்களும் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்வதற்காக சென்று விட்டார். தற்போது அவரது வெளிமாநில தேர்தல் பிரசார பயண திட்டம் நிறைவு பெற்று விட்டது.இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்தார். மாநில பொறுப்பாளர்கள், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று தமிழகம் முழுவதிலும் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சென்னை வந்தனர்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைப்பு ரீதியாக 66 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்கள் 8 பெரும் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கட்சி நிர்வாகம் நடந்து வருகிறது.
இந்த நிர்வாகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் ஆலோசனை கூட்டத்துக்காக சென்னை வந்தனர்.மேலும் பாரதிய ஜனதா சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட 19 வேட்பாளர்கள், கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் ஆகியோரும் ஆலோசனை கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். இன்று காலை 9.30 மணிக்கு சென்னை அமைந்தகரையில் இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பா.ஜ.க. வேட்பாளர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், பால்கனகராஜ், வினோஜ் செல்வம், பொன் பாலகணபதி, மூத்த தலைவர் எச்.ராஜா உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமையப் போகிறது. அதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மாய உலகிலும், கனவுகளிலும் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது கனவு ஜூன் 4-ந்தேதி தகர்ந்து விடும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெறுவதை 4-ந்தேதி பார்க்க போகிறீர்கள்.
எனவே தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் அனைவரும் ஜூன் 4-ந்தேதி வெற்றி கொண்டாட்டத்துக்கு இப்போதே தயாராகுங்கள். ஒவ்வொரு ஊரிலும் பாரதிய ஜனதாவின் வெற்றி சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.ஒட்டு மொத்த இந்தியாவிலும் பல கட்சிகள் பிரதமர் மோடியை எதிர்க்கின்றன. ஆனால் பிரதமர் மோடி நாட்டு மக்களை நம்பி களத்தில் உள்ளார்.
நமது வெற்றியை யாராலும் ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது.காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தாங்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இதுவரை சொல்ல இயலவில்லை. ஆனால் பாரதிய ஜனதாவை 400 தொகுதிகளில் வெற்றி பெற விட மாட்டோம் என்று மட்டுமே சொல்லி வருகி றார்கள்.சரி போகட்டும். நாங்கள் 399 இடங்களில் வெற்றி பெறுவோம்.தமிழகத்தில் பாரதிய ஜனதாவும் தோழமை கட்சிகளும் போட்டியிட்ட 39 தொகுதிகளில் பாரதிய ஜனதாவின் தொண்டர்கள் அயராது பாடுபட்டார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் சாதாரண அடிமட்ட தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை கடுமையாக உழைத்தார்கள்.அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு அவர்களுக்கான உழைப்பின் பலனை காணப் போகிறார்கள்.தற்போது வடக்கு, தெற்கு என்று பேசுகிறார்கள். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு இந்த பிரிவினை இருக்காது. வட மாநிலங்களுக்கு இணையாக தென் மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு இருப்பதை அனைவரும் பார்க்கப் போகிறார்கள்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
Leave your comments here...