கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த மாவட்ட ஆட்சியர் – உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்..!
கள்ளழகர் கோயில் திருவிழாவின்போது நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது, பாரம்பரிய முறையில் ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல்பைகளில் நறுமண நீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் கள்ளழகர் மீது பீய்ச்சி அடிப்பது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால், சாமி சிலையும், ஆபரணங்களும் சேதமடைவதுடன் பெண்கள், குழந்தைகள் மீதும் அத்துமீறி தண்ணீர் தெளிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனிடையே, தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், முன் அனுமதி பெற்றவர்கள்தான் பாரம்பரிய முறையில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டுமென்ற மதுரை ஆட்சியரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. 7 பேர் மட்டுமே தண்ணீரை பீய்ச்ச அனுமதி பெற்ற நிலையில் இது பாரம்பரியத்தை பாதிக்காதா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஆட்சியரின் உத்தரவு பாரம்பரியத்தை பாதிப்பதோடு பக்தர் மனதை புண்படுத்தலாம் என்பதால் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் கோயில் நிர்வாகத்திடமோ, சட்ட வல்லுனர்களிடமோ கேட்காமல் எவ்வாறு இது போன்ற தான் தோன்றித்தனமாக உத்தரவுகளை பிறப்பிக்கிறார் என காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுகுறித்து ஆட்சியர் சங்கீதா விளக்க கடிதம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகிற 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
முன்னதாக, இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அழகர் மலையிலிருந்து வைகை ஆற்றங்கரை வரை வரும் வழியில் சுவாமி மீது தண்ணீர் தெளிக்காமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீது தண்ணீர் தெளித்து அவர்களை துன்புறுத்தலுக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
அது போல் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்வுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார். மதுரை ஆட்சியரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த ரஞ்சித் குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன் அனுமதி பெற்றவர்கள்தான் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டுமென்ற மதுரை ஆட்சியரின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்
Leave your comments here...