காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத்துறையில் பல்வேறு ஊழல்கள் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம்
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை எடுத்துக்கொண்டால் பாதுகாப்புத் துறையில் பல்வேறு ஊழல்கள் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார்.
மதுரையில் பேட்டி அளித்த அவர், “2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான தொலைநோக்கு திட்டத்தை பாஜக கொண்டிருக்கிறது. இதை கருத்தில்கொண்டு பாஜக தனது தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறது. அந்த வகையில் பாஜகவின் தேர்தல் அறிக்கைகள் முற்போக்கானவையாக உள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கிக் கொண்டு செல்வதாக உள்ளது. எனவே, இரண்டுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. திவாலாகும் வங்கியின் செக் புத்தகத்துக்கும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்திருக்கிறது. ஏவுகனைகள், டேங்குகள் உள்ளிட்ட பல்வேறு தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்தது. ஆனால், நாம் தற்போது இவற்றை ஏற்றுமதி செய்து வருகிறோம். 2014ல் பாதுகாப்புத் துறையில் இந்திய ஏற்றுமதி மதிப்பு ரூ. 600 கோடியாக இருந்தது. அது தற்போது ரூ. 31,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. வரும் காலங்களில் நாம் எந்த அளவுக்கு ஏற்றுமதி செய்வோம் என்பதை இன்னும் சில மாதங்களில் தெரிந்துகொள்ள முடியும்.
கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் அரசு மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது. அதேநேரத்தில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை எடுத்துக்கொண்டால் பாதுகாப்புத் துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. பொருளாதாரத்தில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்திருக்கிறது. உலகின் வலிமையான பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் இருப்பதாக உலக நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரு நாடு என்றால் சின்ன சின்ன பயங்கரவாத சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என அவர்கள் சொன்னார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பயங்கரவாதத்தை ஏறக்குறைய ஒழித்துவிட்டோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும். தற்போது அப்படி இல்லை.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த இந்தியா தற்போது இல்லை என்பதை அண்டை நாடுகளும் தற்போது தெரிந்து வைத்திருக்கின்றன. யாரேனும் நம்மை அச்சுறுத்தினால், கடுமையான பதிலடி கொடுக்கக் கூடிய நாடாக நாம் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரை வந்தார். அப்போது அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் இரவு அழகர்கோவில் சாலையில் உள்ள தங்குவிடுதியில் தங்கினார். இதனையடுத்து இன்று காலை உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற பின்னா் முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்தார்.
பின்னர் மீனாட்சியம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டார். பின்னர் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்டசக்தி மண்டபம் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர் தங்கிய தங்கு விடுதியில் இருந்து கோவில் வரை பலத்த பாதுகாப்பு போடப் பட்டதோடு, கோவிலை சுற்றிய பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.
மீனாட்சியம்மன் கோவிலில் 30 நிமிட சாமி தரிசனம் முடித்த பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுசென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலமாக அசாம் புறப்பட்டுசென்றார்.முன்னதாக காலையில் ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
Leave your comments here...