சீனப் பணியாளர்களுக்கான விசா – கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு..!

இந்தியா

சீனப் பணியாளர்களுக்கான விசா – கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு..!

சீனப் பணியாளர்களுக்கான விசா  – கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு..!

பஞ்சாபில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க, சீனப் பணியாளர்களுக்கான விசாவை மீண்டும் பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறுவதற்காக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நெருங்கிய உதவியாளர் மூலம் ரூ.50 லட்சம் லஞ்சமாகப் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

அட்வாண்டேஜ் ஸ்ட்ரேடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிட். நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மற்றும் சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில், “வேதாந்தா குழுமத்தின் தால்வாண்டி சபோ பவர் லிட் (டிஎஸ்பிஎல்) நிறுவனம், பஞ்சாபில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக, 263 சீன பணியாளர்களுக்கான விசாவை மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டு அப்போதைய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அணுகியது.

இந்தப் பணியை முடிக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கமான கணக்காளர் பாஸ்கரராமனுக்கு டிஎஸ்பிஎல் நிறுவனம் ரூ.50 லட்சத்தை செக் மூலமாக வழங்கியது. இந்த பணத்தை அவர், அட்வாண்டேஜ் ஸ்ட்ரேடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிட். நிறுவனத்தில் முதலீடு செய்தார். இந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இயங்கியது.

முதலீடு செய்யப்பட்ட ரூ. 50 லட்சத்தின் மதிப்பு குறிப்பிட்ட காலகட்டத்துக்குளு் ரூ.1.59 கோடியாக அதிகரித்துள்ளது. பண பரிமாற்றத் தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) விதிகளின்படி குற்றத்தின் வருமானம் ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட(பிஎம்எல்ஏ) சிறப்பு நீதிமன்றம், மார்ச் 19 அன்று அரசுத் தரப்பு புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. குற்றப்பத்திரிகையில் பட்டியலிடப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி உட்பட அனைவரையும் ஏப்ரல் 15 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில், தனது தரப்பு கருத்துக்களை தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் போவதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த அவர், தனது தந்தை ப.சிதம்பரத்தை குறிவைக்கும் நோக்கில் தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். தன் மீதான குற்றச்சாட்டு போலியானது என்றும், சீன நாட்டவர்கள் யாரும் இந்தியா வர விசா ஏற்பாட்டை தான் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...