பெங்களூரு – சென்னை இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்- துவக்கி வைக்கிறார் பிரதமர்..!
பெங்களூருவிலிருந்து ஏற்கனவே சென்னைக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நிலையில், சென்னைக்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் மார்ச் 12ம் தேதியிலிருந்து இயக்கப்படவுள்ளது.
சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இவர்களில் தொழில் ரீதியாக ஃபர்ஸ்ட் கிளாஸ் வசதிகள் உடன் ஏசி முதல் வகுப்பு ரயில் பெட்டிகள், விமானங்களில் எகானமிக் கிளாஸில் பலரும் பயணம் செய்கின்றனர். இந்த வசதிகளுக்கு சற்றும் குறையாமல் அதிவேக ரயில் சேவையாக பயன்பாட்டிற்கு வந்தது தான் சென்னை – மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இது சென்னை சென்ட்ரலில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு காட்பாடி (7.15), பெங்களூரு (10.10) வழியாக மைசூரு (12.20) சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் பிற்பகல் 1.05 மணிக்கு மைசூருவில் புறப்பட்டு பெங்களூரு (2.50), காட்பாடி (5.33) வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை 7.20 மணிக்கு வந்தடைகிறது. வாரந்தோறும் புதன் கிழமை மட்டும் இயக்கப்படாது. இந்த ரயில் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இதே வழித்தடத்தில் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி 12ம் தேதியன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இத்தகவலை பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி பி.சி.மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெங்களூரு – சென்னை இடையேயான பழைய வந்தே பாரத் ரயில் வெள்ளை மற்றும் நீல நிற காம்பினேஷனில் இருக்கும் நிலையில், புதிய வந்தே பாரத் ரயில் வெள்ளை மற்றும் காவி நிறத்தில் இருக்கும். இந்த ரயில் சேவையின் நேர அட்டவணை மற்றும் கட்டணம் ஆகிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், பெங்களூரு – கலபுர்கி மற்றும் பெங்களூரு – மதுரை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார்.
Leave your comments here...