பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு.. துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் – என்ஐஏ அறிவிப்பு

இந்தியா

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு.. துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் – என்ஐஏ அறிவிப்பு

பெங்களூரு  ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு.. துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் – என்ஐஏ அறிவிப்பு

பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கபே உணவகம் அமைந்து உள்ளது. பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ள இந்த உணவகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். வழக்கம்போல் மார்ச் 1 ஆம் தேதி மதியம் சுமார் 1 மணியளவில் அங்கு ஏராளமானோர் அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, அதி பயங்கர சத்தத்துடன் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.

இதன் காரணமாக அந்த உணவகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஓட்டல் கண்ணாடிகள், தரையில் இருந்த கிரானைட் கற்கள் உடைந்து சிதறின. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண், உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் உணவகத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உணவகத்தின் கை கழுவும் பகுதியில் குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது.

அங்கிருந்த ஒரு பையில் ஒரு அடையாள அட்டை, பேட்டரி, இரும்பு போல்டு ஆகியன இருந்தன. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோப்ப நாய்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 5 பேரை பிடித்து கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்நிலையில்,  இது குறித்து புதன்கிழமை என்.ஐ.ஏ., வெளியிட்ட அறிவிப்பில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டது. மேலும், இந்த நபரைக் கைது செய்வதற்கு முக்கிய தகவல்களை அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.பொதுமக்களிடமிருந்து ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முயற்சியாக என்.ஐ.ஏ இந்த சன்மானத்தை அறிவித்துள்ளது. சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பான முக்கியமான தகவல்களை வழங்கும் எந்தவொரு நபரின் அடையாளமும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ உறுதியளித்தது.

இதனால் தகவல் அறிந்தவர்கள் நம்பிக்கையுடன் முன்வந்து தகவல்களை வழங்கலாம் என்றும் அது இந்த வழக்கில் விரிவாக தீர்வு காண்பதை எளிதாக்குயும் என்றும் குறிப்பிட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தகவல் தெரிந்தவர்கள் தாமாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு என்ஐஏ வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளை 08029510900 அல்லது 8904241100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறது.

Leave your comments here...