புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி – கொந்தளிப்புடன் தீவிரமாகும் மக்கள் போராட்டம்..!
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 2-ந்தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானாள்.
சிறுமியை அவளது பெற்றோர் அக்கம் பக்கத்து வீடுகள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒரு கேமரா பதிவில் சிறுமி மட்டுமே தனியாக அப்பகுதியில் நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் சிறுமியை பற்றிய எந்த துப்பும் கிடைக்காததால் அவளது கதி என்ன? என்பது தெரியாமல் பெற்றோரும், உறவினர்களும் பதற்றமடைந்தனர். மாயமான சிறுமியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த நிலையில் மாயமான சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் சாக்கடை கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாக்கடை கால்வாயில் தேடினார்கள். அப்போது வேட்டியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் சிறுமியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடைக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியின் உடலை சாக்கடையில் இருந்து வெளியே மீட்டனர். இறந்து 3 நாட்கள் ஆனதால் அழுகி துர்நாற்றம் வீசியது. சம்பவத்தன்று தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை, கும்பல் நோட்டமிட்டு மறைவான பகுதிக்கு கடத்திச் சென்று கை, காலை கட்டி கொலை செய்துள்ளனர்.
அதை மறைக்க வேட்டியால் உடலை சுற்றி கட்டி, சாக்கடை கால்வாயில் வீசி இருக்கலாம் என தெரிகிறது. சாக்கடையில் இருந்து சிறுமியின் உடல் கை, கால் கட்டப்பட நிலையில் மீட்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சிறுமியை கடத்தி கொடூரமாக கொன்று உடலை சாக்கடையில் வீசியது ஏன்? பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாளா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருணாஸ் (19) என்ற இளைஞரும், விவேகானந்தன் (59) என்ற முதியவரும் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியை தேடிவந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சிறுமி கொலையை கண்டித்து புதுச்சேரியில் போராட்டம் வலுத்துள்ளது. புதுச்சேரி கடற்கரையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலில் இறங்கி போராடிய பலரும் சிறுமி காணாமல் போனதிலிருந்து அவரை உயிருடன் மீட்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து அவர்கள் கடலில் நின்றபடி கோஷம் எழுப்பிய சூழலில் அவர்களை காந்தி சிலைக்கு அருகே போலீஸார் வரவழைத்தனர். தொடர்ந்து காந்தி சிலை முன்பு போராட்டம் நடந்தது. சம்பவம் அறிந்து ஏராளமான இளைஞர்கள் அங்கு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படியாக சிறுமி கொலையை கண்டித்து புதுச்சேரியில் பல பகுதிகளில் போராட்டங்கள் இன்று நடந்துவருகின்றன.
இதேபோல நேரு சிலைக்கு பின்புறம் இருந்து திராவிடர் கழகத்தினர் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை பாரதி பூங்கா அருகில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சிறுமி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முதல்வருடன் டிஜிபி சந்திப்பு: முதல்வர் ரங்கசாமியை டிஜிபி ஸ்ரீனிவாஸ் வந்து சந்தித்தார். இச்சந்திப்பின்போது சிறுமி மரணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் தாசில்தார் பிரித்வி முன்னிலையில் உடற்கூராய்வு தொடங்கியுள்ளது. மாணவியின் உடற்கூராய்வை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்கின்றனர்.
சிறுமி உடல் அழுகிய நிலையில் இருந்ததால் வெட்டுக்காயங்கள் உள்ளனவா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. கை, கால்களை கட்டி அவள் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது பற்றி பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரிய வரும்.குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டமன்றம் முன்பு பெண்கள் திடீர் கோஷம் எழுப்பினர்.
இந்த கொலை வழக்கில் மாநில முதல்-அமைச்சர், உள்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கஞ்சா போதையில் ஐஸ்கீரிம் கொடுத்து சிறுமியை கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ள முதல்வர் ரங்கசாமி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் பெற்றோரிடம் உறுதி அளித்தார்
Leave your comments here...