பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார உரை – ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஒரே நேரத்தில் 8 மொழியில் மொழி பெயர்ப்பு..!
தேர்தல் பிரசாரங்களில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவதில் எப்போதுமே பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது. கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு தேர்தல்களில் சமூக வலைதள பக்கங்களை பாரதிய ஜனதா அளவுக்கு வேறு எந்த கட்சியும் பயன்படுத்தவில்லை.
தற்போது இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மேலும் ஒருபடி மேலே சென்று ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி பிரதமர் மோடி நாடு முழுவதும் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் மற்ற மொழிகளிலும் வெளியிட செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிரதமர் மோடி ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்தல் பிரசாரம் செய்தால் அதை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒடியா ஆகிய 8 மொழிகளில் ஒரே நேரத்தில் கேட்க முடியும்.
பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை நந்தனம் கூட்டத்தில் இந்தியில் பேசினார். அது உடனடியாக தமிழில் சமூகவலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.அது பெரும்பாலான தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. வீடியோக்கள் மூலம் அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார உரை ஒரே நேரத்தில் 8 மொழிகளில் வெளியாகும் போது நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.
Leave your comments here...