இந்தியாவிலேயே முதல்முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!
இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், அம்மாநில பாஜக எம்எல்ஏவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ரூ. 15,400 மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தும் அடிக்கல் நாட்டியும் சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களோடு சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது, மாணவர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயிலின் சிறப்பு: நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய மைல்கல்லாக கொல்கத்தாவில் நதிக்கு அடியில்மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தொழில்நுட்ப கட்டுமான வல்லமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இருக்கும்.
நீருக்கு அடியிலான இந்த மெட்ரோ ரயில் சேவை மூலம், கொல்கத்தா நகரத்தின் இரண்டு பரபரப்பான பகுதிகளை விரைவாக சென்றடைய முடியும். கவி சுபாஷ் – ஹேமந்த் முகோபாத்யாயா மெட்ரோ பிரிவு, ஜோகா – எஸ்பிளனேடு பாதையின் ஒரு பகுதியான தரதலா – மஜர்ஹெட் மெட்ரோபிரிவு ரயில் சேவையையும் பிரதமர்மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இது, நகர்ப்புற போக்குவரத்தை மாற்றி அமைப்பதற்கான முக்கிய திருப்புமுனையாக இருக்கும். நகரங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இந்தியா முழுவதும் நிலையான மற்றும் வலுவான போக்குவரத்து இணைப்பை உருவாக்குவதற்காக விரிவான முன்முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...