ஏமாற்றம் அளித்த தமிழக வேளாண் பட்ஜெட்.. எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை – விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்..!
தமிழக வேளாண் பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழக வேளாண் பட்ஜெட்டில் மண்ணுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கட்டுக்கடங்காத பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி மருந்துகள் போன்றவற்றின் விற்பனையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மண்ணுயிர் பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது பொருத்தமற்றது.
வேளாண் உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படுகிறதே தவிர, தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து குறைபாடு நீடித்து வருகிறது. பட்ஜெட்டில் அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், விளம்பரமாகவே தொடர்கிறது.
குறிப்பாக, வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்துக்கு இரு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்கு 2 நாட்களுக்குகூட அனுமதிக்காமல், வெறும் வாசிப்பது மட்டுமே சம்பிரதாய சடங்காக மேற்கொள்வது, விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாது.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அதே பட்டியல்களையே இந்த ஆண்டும் வாசிப்பதால், எந்தப்பயனும் இருக்காது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதியின்படி, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குவது குறித்து இதுவரை தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதேபோல, இந்த பட்ஜெட்டில் காவிரி-வைகை -குண்டாறு இணைப்புத் திட்டம், ஏரிகள், பாசன வடிகால்கள் மற்றும் ஆறுகள் தூர்வாருவதற்கான சிறப்புத்திட்டங்கள் குறித்தும் இடம்பெறவில்லை. மேலும், பொது விநியோகத் திட்டத்தில், பாமாயில் விற்பனையை தடைசெய்து, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், அதுகுறித்தஅறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் இந்த பட்ஜெட் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்து உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...