விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு..!
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் இன்று (பிப்.17) பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று ஆலங்குளம் அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் ஓர் அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, அபயாஜ், முத்து, அம்பிகா, முருகஜோதி, சாந்தா உள்பட 10 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 8 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave your comments here...