எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக பிரபலங்கள் –
பாஜகவிலிருந்து விலகியிருந்த நடிகை கெளதமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இதேபோல் பாஜகவின் தென் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளர் பாத்திமா அலி அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக அறியப்பட்ட நடிகை கெளதமி, பா.ஜ.கவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.இதனிடையே, சமீபத்தில் நடிகை கௌதமி சென்னை ஆணையர் அலுவலகத்தில் 25 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டார் என்று புகார் அளித்திருந்தார்.இந்தப் புகாரைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாகவும் நடிகை கெளதமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை கெளதமி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து, அ.தி.மு.கவில் இணைந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கெளதமி, எடப்பாடி பழனிசாமியின் பணிகள் என்னைக் கவர்ந்ததால் நான் அதிமுகவில் இணைந்தேன். அதிமுகவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாஜகவில் இருந்து ஏன் விலகினேன் என்பதை உரிய நேரத்தில் விரிவாகக் கூறுகிறேன் எனக் குறிப்பிட்டார்.
இதேபோல் சிறந்த பேச்சாளரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநிலத் தலைவருமான பாத்திமா அலி, பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநில செயலாளராக இருந்து வந்தார். அவர் நேற்று இரவு திடீரென பாஜகவில் இருந்து விலகி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாத்திமா அலி, “நாடு இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சிறுபான்மை மக்களை ஒருங்கிணைக்க கூடிய கட்டாயத்தில் உள்ளேன். அதற்கு உதவி செய்யும் கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது இணைந்துள்ளேன். தொடர்ந்து பாஜகவில் இருந்தால் இஸ்லாமியராக வாழ்வதற்கான தகுதி இல்லாமல் போய் விடுவேன்.
இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்களின் வாழ்விடங்களும் குறிவைத்து தாக்கப்படும் சூழ்நிலையில் தொடர்ந்து அந்த கட்சியில் இருந்தால் நான் இஸ்லாமியராக இருப்பதற்கே தகுதி இல்லாதவளாக போய்விடுவேன். ராமர் கோயில் விவகாரம் முடிந்தது, அடுத்தது கிருஷ்ணர் கோயில் தான் என்று அங்கு பேச்சுக்கள் கிளம்பி உள்ளது. மசூதிகள் இடிக்கப்படுகின்றன. அந்த நிலைப்பாடு என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதிமுக இறை மறுப்பு என்ற கொள்கையை என்றைக்கும் எடுத்ததில்லை. எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி ஜெயலலிதா தற்போது எடப்பாடியார் வரை சிறுபான்மை மக்களுக்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சிறுபான்மை இன மக்களுக்கு அதிமுகதான் எப்போதும் பாதுகாப்பு. அதனால் நானும் அந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளேன்” என்று பாத்திமா அலி தெரிவித்தார்.
பாஜகவில் இருந்த நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்த நிலையில் மற்றொரு பிரபலமான பாத்திமா அலி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave your comments here...