சத்குரு முன்னிலையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஈஷா யோக பயிற்சி!
கோவை ஈஷா யோக மையத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு “இன்னர் இன்ஜீனியரிங் லீடர்ஷிப் ரிட்ரீட்” என்ற யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சத்குரு அவர்கள் வழிநடத்திய இப்பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.ஓ உயர் அதிகாரிகள் பங்கு பெற்றனர். இந்த பயிற்சி வகுப்பில் இதுவரை 800-க்கும் அதிகமான அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை, ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து 100-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகளுக்கு “இன்னர் இன்ஜீனியரிங் லீடர்ஷிப் ரிட்ரீட்” எனும் 5 நாள் பயிற்சியை நடத்தியுள்ளது. சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இப்பயிற்சி ஜனவரி 29-ஆம் தொடங்கி பிப்ரவரி 2-ஆம் தேதி வரை கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் சத்குருவால் வழிநடத்தப்படும் தியான அமர்வுகள், கலந்துரையாடல் மற்றும் யோகாசனப் பயிற்சிகள் இடம்பெற்றன. மேலும், பங்குபெற்ற அனைவருக்கும் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த ‘சாம்பவி மஹாமுத்ரா கிரியா’ பயிற்சிக்கான தீட்சையும் அளிக்கப்பட்டது.
இது குறித்து X சமூக வலைதளத்தில் பதிவிட்ட சத்குரு அவர்கள், “ஏராளமான சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தங்களின் உள்நிலை மேம்பாட்டிற்காகவும் மற்றும் உயர்ந்த சாத்தியங்களுக்காகவும் ‘இன்னர் இன்ஜீனியரிங்’ பயிற்சியில் பங்கேற்றிருப்பதை காண அற்புதமாக இருக்கிறது. சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை வடிவமைப்பதில் முன்னனியில் இருக்கும் உங்களுடைய உள்நிலை மேம்பாடு, உங்களை சுற்றியிருக்கும் அனைத்து உயிர்களின் நல்வாழ்வையும் தீர்மானிக்கும் மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை நிகழச் செய்யும் வகையில் குறிப்பிடத்தக்க ஒரு முயற்சியை எடுத்தமைக்கு என் பாராட்டுகள். வாழ்த்துகளும், ஆசியும்” எனப் பதிவிட்டுள்ளார்.
Wonderful to see so many #CivilServiceOfficers invested in Inner Engineering for inner wellbeing and higher possibilities. As the frontliners in crafting social, political and economic change, your inner wellbeing will determine and impact the wellbeing of all lives around you.… pic.twitter.com/QA5DvbFY52
— Sadhguru (@SadhguruJV) February 3, 2024
புதுடெல்லி – திரிபுரா பவன் ஆணையர் திருமதி. சோனல் கோயல் இந்நிகழ்ச்சி குறித்து கூறும் போது, “இது உண்மையிலேயே மிகப்பெரிய மற்றும் அற்புதமான வாய்ப்பு. இந்த பயிற்சியை மேற்கொண்ட பிறகு என் ஆற்றல் மிகுந்திருப்பதையும் மற்றும் என் உள்நிலையுடன் நான் தொடர்பில் இருப்பதையும் உணர்கிறேன். மேலும் சுயவிழிப்புணர்வு குறித்த உணர்வையும் பெற்றுள்ளேன். இந்த பயிற்சி மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சத்குரு அவர்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக கொண்டிருக்கும் ஈடுபாட்டிற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டிற்கு சத்குருவின் நேர்மறையான பங்களிப்பு உண்மையிலேயே மகத்தானது” எனக் கூறினார்.
பீகாரின் சப்ரா – சரன் கோட்ட ஆணையர் திரு. சரவணன் முருகன் அவர்கள் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது, “என்னுடைய சிந்தனை தெளிவாக இருந்தால், என்னுடைய செயல் சிறப்பானதாக இருக்கும். என்னுடைய பணியில் நான் சரியான முடிவுகளை எடுப்பதற்கு இது உதவியாக இருக்கும். இந்த ‘இன்னர் இன்ஜீனியரிங்’ வகுப்பு என் வாழ்க்கையிலும், பணியிலும் மாற்றங்களை ஏற்படுத்த தேவையான யோசனைகளை, பார்வையை மற்றும் தேவையான திறன்களை அடைவதற்கான வழிமுறைகளையும் எனக்கு வழங்கியுள்ளது” என்றார்
அருணாச்சல பிரதேச காவல் பயிற்சி மையத்தின் முதல்வர், நேஹா யாதவ் ஐ.பி.எஸ் அவர்கள் இந்த பயிற்சி குறித்து விவரிக்கும் போது “நாம் மற்றவங்களுடன் அடிக்கடி கலந்துரையாடல்களில் ஈடுபடும் போது பல பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம். அப்போது நம்மை புரிந்து கொள்ளாதவர்களை நாம் நம் எதிரியாக பார்க்கிறோம். இந்த பயிற்சியை முடித்த பிறகு, அந்த மனிதரும் என்னில் ஒரு பகுதி என்பதையும், அவருக்கு அந்த சூழ்நிலையை நான் விளக்கி பொதுவான ஒரு தீர்வை அடைய வேண்டும் என உணர்கிறேன். என்னுள் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம், என் பிரச்சனைகளை நான் எதிர்கொள்ளும் போது பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்.” எனக் கூறினார்.
இந்த பயிற்சியானது மத்திய மற்றும் மாநில அரசுகளில் உயர் தலைமைப் பதவிகளை வகிக்கும் அரசு அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அழுத்தமான சூழலை கையாளுதல், நிர்வாக இலக்குகளை அடைய மாற்று துறைகளுக்கிடையே இணக்கத்தை மேம்படுத்துவது, தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவது, தனி வாழ்விலும், பணியிலும் மன நிறைவு மற்றும் அமைதியுடன் கூடிய தெளிவை வளர்த்து கொள்ளுதல் ஆகியவை இந்த பயிற்சியின் முதன்மை அம்சங்களாகும். அதுமட்டுமின்றி நாள்பட்ட உடல் நல குறைபாடு மற்றும் மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் இப்பயிற்சி வழங்குகிறது
Leave your comments here...