பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது – பிரதமர் மோடி வாழ்த்து..!
பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் எல்.கே. அத்வானி. தனது 14 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து பணியாற்றி அதன் மூலம் அத்வானி அரசியலுக்கு வந்தார்.ஜன சங்கம் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் அந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவராக மிக இளம் வயதில் தேர்வானார். அதன் தொடர்ச்சியாக காங்கிரசுக்கு எதிரான தலைவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.
இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது இவரும் கைதானார். அதன் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய மந்திரி ஆனார்.1980-ம் ஆண்டு பா.ஜனதாவை வாஜ்பாயுடன் இணைந்து உருவாக்கினார். குஜராத் மாநிலம் சோம்நாத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி வரை அவர் நடத்திய ராமர் ரத யாத்திரைதான் தேசிய அரசியலில் பா.ஜனதாவை மிக வலுவாக காலூன்ற வைத்தது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றி உள்ள இவர் 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை துணை பிரதமர் ஆகவும் பணியாற்றி உள்ளார். ஒரு தடவை அவர் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமை பதவிக்கு மோடியும், அமித் ஷாவும் வந்த பிறகு அத்வானியின் அரசியல் செயல்பாடுகள் குறைந்தன. தீவிர அரசியலில் இருந்து அவர் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொண்டார்.
டெல்லியில் உள்ள வீட்டில் தற்போது அவர் ஓய்வு பெற்று வருகிறார்.தற்போது 97 வயதாகும் அத்வானி கடந்த மாதம் அயோத்தி ராமர் ஆலயத்தில் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வயது முதுமை காரணமாக அதில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் அத்வானியின் சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. நாட்டின் மிக உயரிய விருதை அத்வானி பெற்று இருப்பது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடமும், நிர்வாகிகளிடமும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அத்வானிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்வானியின் சேவையை புகழ்ந்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
I am very happy to share that Shri LK Advani Ji will be conferred the Bharat Ratna. I also spoke to him and congratulated him on being conferred this honour. One of the most respected statesmen of our times, his contribution to the development of India is monumental. His is a… pic.twitter.com/Ya78qjJbPK
— Narendra Modi (@narendramodi) February 3, 2024
அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மகிழ்ச்சியையும், இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அத்வானி அவர்கள் செய்துள்ள நிகரற்ற பங்களிப்பு மகத்தானது. நாம் வாழும் காலத்தில் வாழும் மிகவும் போற்றலுக்குரிய அற்புதமான மனிதர் அவர்.அவர் தனது வாழ்க்கையை நாட்டு சேவைக்காகவே தொடங்கினார். அடிமட்ட தொண்டர் முதல் துணை பிரதமர் வரை அவர் நாட்டுக்காக பல்வேறு வகைகளில் சேவை செய்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் சிறப்பானவை.
பாராளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட விவாதங்கள் இன்றும் முன் உதாரணமாக திகழ்கின்றன. பா.ஜ.க.வின் தலைவராக நீண்ட ஆண்டுகள் சேவை யாற்றிய சிறப்பு அவருக்கு உண்டு. அவருடன் பழகுவ தற்கும், இணைந்து சேவை யாற்றியதற்கும் கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்.
தேசிய ஒற்றுமைக்கும், கலாசார மறுமலர்ச்சிக்கும் அத்வானியின் சேவை குறிப்பிடத்தக்கது. அவரது கடின உழைப்பு என்றென் றும் நினைவு கூரத்தக்கது. உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றிய காலங்கள் மறைக்க முடியாதவை.அவரது சேவைக்கு மீண்டும் எனது வணக்கத்தை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு எக்ஸ் வலை தளத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாரத ரத்னா விருது பெற்றுள்ள அத்வானி ஏற்கனவே பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வழங்கப்பட்டது.8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது நாட்டின் உயரிய விருதை அத்வானி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் பிறந்து இந்திய அரசியலில் உச்சம் பெற்ற அத்வானி தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி உள்ளார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை வரலாற்றையும் அத்வானி புத்தகமாக எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...