‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலைப் பாடி பவதாரிணிக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த குடும்பத்தினர்..!
இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் தேனியில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக அவரது உடலை தூக்கிச் சென்ற உறவினர்கள் அவரின் தேசிய விருது பெற்ற பாடலை பாடியபடியே கொண்டு சென்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி(47). பின்னணி பாடகரான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்ற மலையாள படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமானார். பின்பு ராசய்யா, அலெக்சாண்டர், அழகி, தாமிரபரணி, உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார். இந்நிலையில் விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவருக்கும் இவருக்கும் திருமணமானது.
2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது. சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.
பவதாரிணியின் உடல் நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்பு இவரது உடல் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. இன்று காலை அங்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில்தான் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய், மனைவி ஜீவா ஆகியோரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது.
பவதாரிணியின் சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்பி ரவீந்திரநாத், நடிகர்கள் அரவிந்த், கிருஷ்ணா, டிரம்ஸ் சிவமணி, இயக்குநர் அமீர், பேராசிரியர் ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் பவதாரிணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பவதாரிணியின் உடலை பார்த்ததும் இயக்குநர் பாரதிராஜா கதறி அழத் தொடங்கினார்.
விமானம் மூலம் மதுரை வந்த இளையராஜா பின்பு காரில் இன்று பிற்பகலில் லோயர்கேம்ப் வந்தார். இறுக்கத்துடன் மனவேதனையில் இருந்த இளையராஜாவுக்கு பாரதிராஜா ஆறுதல் கூறினார்.இறுதி அஞ்சலியின் போது திருவாசகம் வாசிக்கப்பட்டது.
இறுதிச்சடங்குகள் அனைத்தும் முடிந்த நிலையில் உறவினர்கள் பவதாரிணியின் உடலை தூக்கியபடி, அவரின் தேசிய விருது பெற்ற பிரபல பாடலான ‘மயில் போல பொண்ணு ஒன்னு. கிளிபோல பேச்சு ஒன்னு’ என்ற பாடலை பாடியபடி சென்றனர். “இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் மணிமண்டபத்துக்கு நடுவில் பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இவருக்கும் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறும்” என இளையராஜாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
Leave your comments here...