கங்கையில் நீராடினால் புற்றுநோய் குணமாகும் – பெற்றோர் செய்த செயலால் 5 வயது சிறுவன்
கங்கையில் நீராடினால் தங்கள் மகன் புற்றுநோயில் இருந்து குணமடைவான் என நம்பி, பெற்றோர் செய்த செயலால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவத்துக்குக் காரணமான குடும்பம் டெல்லியில் இருந்து புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட தங்களது 5 வயது மகனை அழைத்துக் கொண்டு, ஹரித்துவாரின் கார் கி பவுரிக்கு புதன்கிழமை வந்துள்ளது. குழந்தையின் பெற்றோருடன் அவர்களது உறவினர் ஒருவரும் வந்துள்ளார். இவர்கள் கங்கையில் புனித நீராடினால் அதிசயம் நிகழும் என்ற நம்பிக்கையில் நோயுற்ற சிறுவனை திரும்பத் திரும்ப கங்கை நதியில் மூழ்கச் செய்துள்ளனர். இந்த செயல் சிறுவனின் உயிரைப் பறித்து விட்டது.
இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், “குழந்தையின் உடலுடன் பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரை அருகில் இருப்பவர்கள் கண்டிக்கின்றனர். அப்பெண் தன்னிலை மறந்தநிலையில், இந்தக் குழந்தை இப்போது எழுந்து நிற்பான். இது என்னுடைய வாக்குறுதி” என்று கூறுகிறார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் ஸ்வதந்தர குமார் சிங் கூறுகையில், “அந்தத் தம்பதி ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட தங்களது மகனை கங்கையில் புனித நீராடச் செய்வதற்காக அழைத்து வந்துள்ளனர். சிறுவனின் நோய் குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டதாகவும், ஆனால் மருத்துவர்கள் குழந்தையை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, கங்கையில் புனித நீராடினால் சிறுவனின் நோய் குணமாகும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையால் குழந்தையை ஹரித்துவாருக்கு அழைத்து வந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த மக்கள் பெற்றோரின் நடத்தையில் சந்தேகமடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தக் குடும்பம் குழந்தையை நீரில் மூழ்கடித்தனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அக்குடும்பத்தினரை டெல்லியில் இருந்து ஹரித்துவாருக்கு அழைத்து வந்த கார் ஓட்டுநர் கூறுகையில், “அவர்கள் கிளம்பியதில் இருந்தே குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. ஹரித்துவாரை அடைந்ததும் குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அக்குடும்பத்தினர் குழந்தையின் மோசமான நிலைமை குறித்தும் கங்கையில் நீராடுவது குறித்தும் பயணத்தில் பேசிக்கொண்டனர்” என்று தெரிவித்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave your comments here...