இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் – அமைச்சர் சேகர்பாபு..!

தமிழகம்

இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் – அமைச்சர் சேகர்பாபு..!

இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் – அமைச்சர் சேகர்பாபு..!

ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பஸ் முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொங்கலுக்கு பிறகு அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் இதுவரை ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில் பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை ஜனவரி 24ம் தேதி வரை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதற்கான அனுமதியும் அரசு வழங்கியது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், முடுச்சூர் வரதராஜபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவு பெறாததை மேற்கோள் காட்டி ஆம்னி பேருந்துகளை அடுத்து 3 அல்லது 4 மாதங்களுக்கு கோயம்பேடு வரை பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள். கோயம்பேட்டில் இன்றுடன் ஆம்னி பேருந்துகள் முழுமையாக தடை செய்யப்படும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்காக அரசு செயல்பட முடியாது. என்று அவர் கூறியுள்ளார்.

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரும் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...