அதானி நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த ஆளில்லா உளவு விமானம் – ‘திருஷ்டி-10 ஸ்டார்லைனர்’ அறிமுகம்..!
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, முதல் ஆளில்லா விமானமான ‘திருஷ்டி 10 ஸ்டார்லைனர்’ விமானத்தை, இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் நேற்று ஹைதராபாதில் அறிமுகப்படுத்தினார்.
இந்த ஆளில்லா விமானம், ‘அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.’உளவுத்துறை, கண்காணிப்பு தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் மேலாதிக்கம் ஆகியவற்றில் சுயசார்பை அடைய விரும்பும் இந்தியாவின் முயற்சியில் இது ஒரு முக்கிய படி’ என்று கூறிய கடற்படைத் தளபதி, திருஷ்டி 10ன் ஒருங்கிணைப்பு நாட்டின் கடற்படை திறன்களை மேம்படுத்தும் என்றும், எப்போதும் வளர்ந்து வரும் கடல் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறைக்கான கடற்படையின் தயார்நிலையை வலுப்படுத்தும் என்றும் கூறினார்.
மேலும், அதானி குழுமம், கடற்படையின் தேவைகளுக்கு ஏற்ப, அதன் திட்டங்களை சீரமைத்துள்ளதற்காகவும், நாட்டின் பாதுகாப்பு துறையில் தன்னிறைவை உறுதிசெய்ய சிறந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரும், கவுதம் அதானியின் மகனுமான ஜீத் அதானி கூறியதாவது: சமீபத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகள், நுண்ணறிவு, தகவல் செயலாக்க திறன், ஆளில்லா கருவிகளின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான தகவல் மற்றும் அறிவாற்றல் திறன்களின் ஒருங்கிணைப்பை வலியுறுத்தியுள்ளன.
இந்திய எல்லைப் பகுதிகளின் உளவு மற்றும் கண்காணிப்புக்கு, அதானி நிறுவனம் இந்திய பாதுகாப்பு படைகளின் தேவையை நிறைவேற்ற உதவும். மேலும், ஏற்றுமதிக்கான உலக அரங்கில் இந்தியாவை இடம்பெறச் செய்யும். இந்திய கடற்படை மற்றும் அதன் தேவைகளுக்கு சேவை செய்வதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...