அயோத்தி பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் லட்டுகளுக்கு புவிசார் குறியீடு..!
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் பஜ்ரங்பலி அனுமன்கார்ஹி என்ற பெயரில் உலக பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் அமைந்துள்ளது. அந்நகரின் காவலராக அறியப்படும் அனுமனின் அனுமதியின்றி, ஒருவரும் கடவுள் ராமரை தரிசனம் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.
இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. தொலைதூர பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து இந்த லட்டுகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், புவிசார் குறியீட்டுக்கு அனுமன் கோவில் லட்டின் பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒருபுறம் அயோத்தியில் ராமர் கோவில் தொடக்க விழா நடைபெறும் சூழலில், மறுபுறம் அனுமன்கார்ஹி லட்டின் பெயர் புவிசார் குறியீட்டுக்கு பதிவாகி உள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை பக்தர்களும், லட்டு தயாரிப்பில் ஈடுபடுபவர்களும் வரவேற்று உள்ளனர்.
இந்த புவிசார் குறியீடு என்பது, மற்ற பொருட்களை விட சிறப்பான பண்புகளை கொண்டிருக்கும் ஒரு பொருளுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க சான்றாகும். இதற்காக அந்த பொருட்களை உற்பத்தி செய்ய கூடிய கூட்டமைப்பு அல்லது நிறுவனம் புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கலாம். கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் இந்த புவிசார் குறியீடு வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த புவிசார் குறியீட்டை முதன்முதலில் இந்தியாவில், டார்ஜிலிங் தேநீர் பெற்றது.
Leave your comments here...