72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்..!

தமிழகம்

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்..!

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்..!

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் விஜயகாந்தின் குடும்பத்தினர், நெருங்கிய நட்பு வட்டம், முதல்வர் ஸ்டாலின், இந்நாள் – முன்னாள் அமைச்சர்கள், சில திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு: தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது. இதற்காக 50 கிலோ எடை கொண்ட பிரத்யேக சந்தனப் பேழை தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த சந்தனப் பேழையின் ஒருபுறத்தில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்கிற வாசகமும், நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற வாசகமும், அதேபோல் அவரின் பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் இடம்பெற்றிருந்தன. இதேபோல் சந்தனப் பேழையின் மற்றொரு பக்கத்தில் ‘கேப்டன்’ என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக குழிக்குள் இறக்கப்பட்டபோது உறவுகளும், நண்பர்களும், தொண்டர்களும் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.

வாகனத்தில் இருந்து விஜயகாந்தின் உடலை காவல் துறையினர் சுமந்து வந்தனர். பின்னர் சரியாக மாலை 6 மணிக்கு காவல் துறையினர் விஜயகாந்தின் உடலுக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். பின்னர், 72 குண்டுகள் வான் நோக்கி சுடப்பட்டு, வாத்தியங்கள் முழங்க விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் உறவினர்கள் விஜயகாந்தின் உடலைச் சுற்றிவந்து இறுதிச் சடங்களை செய்தனர். குடும்ப வழக்கப்படியான சில சடங்குகளும் செய்யப்பட்டன. 7 மணியளவில் விஜயகாந்தின் உடல் குழியில் இறக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave your comments here...