மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் யாதவ் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் இன்று பதவியேற்றார். பதவி ஏற்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 116 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 164 தொகுதிகளில் ஆளும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸுக்கு 65 தொகுதிகள் கிடைத்துள்ளன. பாரதிய ஆதிவாசி கட்சி ஓரிடத்தை கைப்பற்றி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து கட்சியின் முதல்வராக மோகன் யாதவ் கடந்த திங்கள் கிழமை தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள லால் பரேட் மைதானத்தின் மோதிலால் நேரு ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில், மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாநில பாஜகவின் முக்கிய தலைவர்களான ஜக்தீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் துணைமுதல்வர்களாக பதவியேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் மோகன் யாதவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், நாட்டை வழிநடத்திச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் பாதச்சுவட்டைப் பின்பற்றி மத்தியப் பிரதேசத்தை முன்னேற்றுவோம். அரசர் விக்ரமாதித்யாவின் நிலத்தைச் சேர்ந்தவன் நான். மத்தியப் பிரதேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளேன். விக்ரமாதித்யாவின் ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்ற நல்லாட்சியை நாங்கள் கொடுப்போம் என தெரிவித்தார்.
Leave your comments here...