வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு
வாச்சாத்தி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் உட்பட நிவாரணங்கள் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நான்கு இந்திய வனப் பணியைச் (ஐ.எப்.எஸ்) சேர்ந்த அதிகாரிகள் உள்பட 215 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2011ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் அந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வாச்சாத்தி வழக்கின் குற்றவாளிகளான எல்.நாதன், பாலாஜி, ஹரிகிருஷ்ணன், எத்திராஜ், ராமசாமி, சுப்ரமணியன் மற்றும் கந்தசாமி ஆகியோர் ஜாமீன் கேட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், ‘அதுவரை இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் உட்பட மற்ற நிவாரணங்கள் எதுவும் வழங்க முடியாது. அன்றையை தினம் விசாரணைக்கு பிறகு முடிவெடுக்கலாம். இருப்பினும் குற்றவாளிகளில் யாராவது ஜாமீனில் இருந்து சரணடைய முன்னதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அவர்கள் அடுத்த விசாரணை நடைபெறும் வரையில் தற்போதைய நிலையை தொடரலாம். மேலும் இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் கொண்ட அறிக்கையை அனைத்து தரப்பு மனுதாரர்களும் சிபிஐ தரப்புக்கு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
Leave your comments here...