நம் ராணுவ வீரர்களின் தியாகத்துக்காக அங்கீகரிப்போம் – கொடி நாள் நிதி அளிக்க பிரதமர் வேண்டுகோள்..!
முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் தேதி படைவீரர் கொடி நாளாகக் கொண்டாடப்படுகிறது.எல்லைப் பகுதிகளை காவல் காத்து, தாய்த்திருநாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.
இந்த கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடி நாள் தினத்தையொட்டி நடக்கும் கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், அண்டை நாட்டு எதிரிகள் மற்றும் உள்நாட்டு பயங்கரவாதிகளின் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.
ஒவ்வொரு மாநில நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக உள்ள அரசு அலுவலகங்களின் மூலம் கொடி நாள் நிதி திரட்டப்படுகின்றது. இந்த நிதி வசூலை இந்திய ஜனாதிபதி, பிரதமர், அந்தந்த மாநிலங்களின் கவர்னர்கள் ஆண்டுதோறும் துவக்கி வைப்பார்கள்.
அதன்பின், மாவட்டங்கள் தோறும் திரட்டப்படும் நிதியானது மாநில அரசிடம் சேர்ப்பிக்கப்படும். மாநில அரசுகள் அனைத்தும் அந்தந்த ஆண்டுகளில் தாம் சேமித்த நிதியை பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய அளவிலான படை வீரர்கள் நலவாரியத்திடம் ஒப்படைக்கும்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று கொடிநாள் தினத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
Today, on Armed Forces Flag Day, we honour the courage, commitment and sacrifices of our brave soldiers. Their dedication in protecting our nation is unparalleled. I also urge you all to make contributions to the Armed Forces Flag Day fund. pic.twitter.com/mJRUjmT2JE
— Narendra Modi (@narendramodi) December 7, 2023
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், இந்தக் கொடி நாளில் நம் ராணுவ வீரர்களை அவர்களின் தைரியம், நம்பிக்கை, தியாகத்துக்காக அங்கீகரிப்போம். நம் தேசத்தைக் காப்பதில் அவையே ஒப்பற்றது. இந்த நாளில் ஆயுதப்படை வீரர்கள் கொடி நாள் நிதியை அளிக்கும்படி உங்களையும் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Leave your comments here...