ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதிக் கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங் – வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- வி.பி.சிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் சிலை அமைப்பதற்கான மகத்தான வாய்ப்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகிறேன்.
தந்தை பெரியாரின் பெயரை உச்சரிக்காமல் வி.பி.சிங்கின் பேச்சு இருக்காது. வி.பி.சிங்கிற்கு தாய் வீடு உத்தரபிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு. நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தினர்தான். வி.பி.சிங் பாராட்டியதை மறக்க முடியாது. வி.பி.சிங் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வி.பி.சிங் 11 மாதங்கள் பிரதமராக இருந்தாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.
ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தியவர். காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதிக் கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங்.மாபெரும் சாதனைகளை செய்து காட்டிய சாதனையாளர் வி.பி.சிங்.சமூக நீதிக்கு தடையாக உள்ள நீட் தேர்வை அகற்ற போராடி வருகிறோம்.இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Leave your comments here...