சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன்…. கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(17-ந்தேதி) காலை மண்டல பூஜை தொடங்கியது. முதல் நாளே பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலையில் குவியத் தொடங்கினர்.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. இந்த நிலையில் சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்துக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்,செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிச.8, ஜன.12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், டிச.24, 31 தேதிகளில் மாலை 4.30 மணிக்கும், ஜன.7-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கும், ஜன.10, 17-ஆம் தேதிகளில் மாலை 4 மணிக்கும், ஜன.14-ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு டிச.9, ஜன.13, ஜன.20 தேதிகளில் இரவு 11 மணிக்கும், டிச.26, ஜன.2, 9, 12, 19, 16 தேதிகளில் நள்ளிரவு 2.30 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கோட்டயத்துக்கு டிச.1, 8, 29, ஜன.12, 19 தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், டிச.15, 22, ஜன.5 தேதிகளில் மாலை 4.25 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக கோட்டயத்தில் இருந்து விஜயவாடாவுக்கு டிச.3, 10, 17, 24, 31, ஜன.7, 14, 21 தேதிகளில் நள்ளிரவு 1 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், ஆந்திர மாநிலம் நா்சாபூரில் இருந்து கோட்டயத்துக்கு டிச.10, 17, 24, 31 ஜன.7, 14 தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிச.11, 18, 25, ஜன.8, 15 தேதிகளிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரெயில்கள் ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, கோவை, திருச்சூா் வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டுகளை வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...