ராஜ்பவன் தாக்குதல்… புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை – ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு.!
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென நேற்று பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில், அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய எப்.ஐ.ஆர். பதிவில், பெட்ரோல் குண்டு அதிக சத்தத்துடன் வெடித்தது என்றும் அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ராஜ்பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவுசெய்யவில்லை என காவல்துறை மீது கவர்னர் மாளிகை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 26, 2023
இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-“ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவுசெய்யவில்லை. தன்னிச்சையாக பதிவுசெய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசக்கார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...