ரோகித், ராகுல் சதமடிக்க, குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா..!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இருவரும் ஒன்று, இரண்டு என ரன்களை எடுத்தனர். கிடைத்த பந்துகளில் சிக்சர், பவுண்டரிகளை அடிக்க தவறவில்லை. இருவரும் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. ரோகித் ஒரு பக்கம் சற்று நிதானம் காட்ட, ராகுல் சற்று வேகமாக ரன்கள் சேர்த்தார். இவர் 46வது பந்தில் அரைசதம் எட்டினார். போகப் போக வேகமாக ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா, ஒருநாள் அரங்கில் 28வது சதம் அடித்தார். 3வது சதம் எட்டிய ராகுல், 102 ரன்னுக்கு அவுட்டானார். கோஹ்லி ‘டக்’ அவுட்டானார்.வாண வேடிக்கை காட்டிய ரோகித் சர்மா, 159 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த ரிஷாப் பன்ட், 16 பந்தில் 39 ரன்கள் அடித்தார். மின்னல் வேகத்தில் ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 5வது அரைசதம் எட்டினார். இவர் 53 ரன்னுக்கு (32 பந்து) அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. கேதர் ஜாதவ் (16), ஜடேஜா (0) அவுட்டாகாமல் இருந்தனர். இறுதியில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 388 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்து அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 75 ரன்னில் வெளியேறினார். இறுதியில், கீமோ பால் போராடி 46 ரன் எடுத்து அவுட்டானார். ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் 280 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். மொகமது ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.
Leave your comments here...